முன்னாடி மாதிரி நடக்காதாம்.. “தைரியமா என்னோட நில்லுங்க” கலக்கமடைந்த ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் மெசேஜ்!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருவது தொடர்கிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் மட்டுமே தற்போது ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், தனது நிலைப்பாட்டில் இனி மாற்றம் இருக்காது என்றும், இறுதி வரை உறுதியாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவு சரிவு
ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, அதிமுகவில் கோஷ்டி மோதல் வெளிப்படையாகவே உருவானது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக சரிந்துள்ளது. இன்று காலை வரை 7 மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளார்.

வேளச்சேரி அசோக்
சென்னையின் ஒரே ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளரான வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேளதாளத்துடன் 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று மாவட்ட செயலாளர் அசோக் ஆதரவு தெரிவித்தார். வேளச்சேரி அசோக் எதிர் முகாமுக்குச் சென்றதன் மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக சரிந்துள்ளது. முன்னாள் எம்.பி மைத்ரேயனும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறியுள்ளார்.

பெருகும் எடப்பாடி பலம்
அதிமுகவில் நிர்வாக ரீதியான 75 மாவட்டங்களில் 69 மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு தஞ்சை வைத்திலிங்கம், தேனி சையதுகான், கன்னியாகுமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், தஞ்சை சுப்பிரமணி ஆகிய மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். இவர்களில் ஒன்றிரண்டு பேரையும் தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தூண்டில் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

திடமாக நிற்கமாட்டார்
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் ஆதரவாளர்கள் வெகுவாகக் குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமான காரணம், ஓ.பி.எஸ் தனது முடிவில் திடமாக நிற்க மாட்டார், எதிர்ப்புகள் எழுந்தால் பின்வாங்கி விடுவார், தலைமைப் பதவியில் அவரால் திறம்படச் செயல்பட முடியாது, ஓபிஎஸ் மைனஸ் ஆகும் இடங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கவர் செய்வார் என்பதால் எடப்பாடி பழனிசாமியை நோக்கி ஆதரவாளர்கள் செல்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

தர்மயுத்தம்
சசிகலா மீது குற்றம்சாட்டி தர்ம யுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு, ஆட்சியையும், கட்சியையும் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்பட முடிவெடுத்தார். ஆனால், சமீபகாலமாக ஓ.பி.எஸ், சசிகலா வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி வருகிறார். இதுபோல, அனைத்து விஷயங்களிலும் முன்வைத்த காலை பின் வைப்பதே ஓபிஎஸ்ஸுக்கு வாடிக்கை என்பது அதிமுக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.

படையெடுக்கும் மா.செக்கள்
இப்போது கூட, தான் முன்பு குற்றம்சாட்டிய சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு வேண்டிச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், திமுக அரசை விமர்சிப்பதில் கூட ஓ.பி.எஸ் மென்போக்கையே கடைபிடித்து வருகிறார். இதுவும் ஓ.பி.எஸ் பக்கம், முக்கிய நிர்வாகிகள் அணி சேராததற்கு ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள். நாளுக்கு நாள் ஓ.பி.எஸ் தரப்பு அதிமுகவில் சீனுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாலும், மா.செக்கள் எதிர் முகாமுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் நம்பிக்கை
தனது ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கம் சாய்ந்து வரும் நிலையில், நேற்று இரவும் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்ற உத்தரவு நமக்குச் சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, ஒருவேளை நமக்குச் சாதகமாக வராவிட்டாலும், நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாத வகையில் நீதிமன்றத்தில் முயற்சிக்கலாம், அதற்கு கட்சியின் சட்ட விதிகள் நமக்கு ஆதரவாகவே இருக்கின்றன எனக் கூறியதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்களிடம் உறுதி
மேலும், நாளை நடைபெறும் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்துகளும் எழுந்து வருவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொஞ்சம் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எனது நிலைப்பாட்டில் இனி மாற்றமில்லை. இறுதி வரை இதே உறுதியோடு இருப்பேன், நீங்கள் கவலைப்படாதீர்கள், தைரியமாக என்னுடன் இருங்கள் எனக் கூறியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications