வாழ்க்கையினா சில அடிகள் விழத்தான் செய்யும்! ஒரே சான்ஸ் இருக்கு! சிக்னலுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தோல்வியை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நம்பிக்கையாக அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அதன் முடிவுகள் வந்தபின் புதிய கட்சி தொடங்கலாமா அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு தேசிய கட்சியில் சேர்ந்து விடலாமா என யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓங்கும் இபிஎஸ் கை
இந்த நிலையில், சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். எடப்பாடி கட்சி அலுவலகம் வருகையையொட்டி வழிநெடுக அவருக்கு ஆட்டம், பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பு அதிமுக அலுவலக சாவி வழக்கை பெரிதும் நம்பி இருந்தது.

கடும் சோர்வு
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதனால் கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஓபிஎஸ் முகாமுக்கு சறுக்கல் தான் ஏற்பட்டு வருகிறது. பொதுக்குழுவில் அவமதிப்பு, நிர்வாகிகள் எடப்பாடி தரப்புக்கு தாவியது, அதிமுக அலுவலகத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு என அடுத்தடுத்த அடிகளால் கடும் சோர்வில் உள்ளனர் அவரது அணியினர்.

இறுதி நம்பிக்கை
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் இறுதி நம்பிக்கையாக அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான் தீர்ப்பை நம்பியே இருக்கின்றனர். ஆனால் அது தங்கள் தரப்புக்குச் சாதகமான தீர்ப்பு வரும் நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். காரணம் கடந்த தீர்ப்புகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கிலும் இதே நிலை தான் என்கின்றனர்.

4 வாய்ப்புகள்
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து தேனி தரப்பினர் சில தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். அதாவது உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தால் அதிமுகவை கைப்பற்றும் ஓபிஎஸ் அதன்பிறகு சசிகலாவை சந்திப்பார். இல்லையெனில் தனி கட்சி தொடங்கியோ அல்லது தேசிய கட்சி ஒன்றில் இணைந்து விடவோ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு சதவீதம் மிகக் குறைவு. மூன்றாவதாக ஏற்கனவே இணைந்தது போல எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து செயல்படலாம் என்கின்றனர். மேலும் அரசியலில் இதெல்லாம் சகஜம் ஜெயலலிதா மறைவின்போதும் இதைவிட அதிகமாக சண்டையிட்டுக் கொண்டவர்கள் மீண்டும் சேரவில்லையா? எனவே தற்போது நடப்பது தற்காலிகம் தான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications