Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெந்த புண்ணில் வேல்.. செலவை குறைக்கிறேன் என சேவையை குறைப்பதா? திமுக அரசுக்கு எதிராக கொதித்த ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2,500 செவிலியர்களை பணி நீக்கம் செய்து திமுக அரசு ஆணை பிறப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அரசாணை வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போராட்டங்களையும் லிஸ்ட் போட்டு திமுக அரசை விமர்சித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

வெந்த புண்ணில் வேல்

வெந்த புண்ணில் வேல்

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்; ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அமல்படுத்துமாறு மருத்துவர்கள் போராட்டம்; விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக விவசாயிகள் போராட்டம்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டித்து தற்காலிக ஊழியர்கள் போராட்டம் என தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், 'புத்தாண்டு பரிசாக' கொரோனா காலத்தில் பணி புரிந்து கொண்டிருக்கின்ற 2,500 செவிலியர்களை பணி நீக்கம் செய்து தி.மு.க அரசு ஆணை பிறப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

மனம் போன போக்கில்

மனம் போன போக்கில்

சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் கொரோனா தொற்றின் அடுத்த அலை அபரிமிதமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த 40 நாட்களில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சகட்டத்தை அடையும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்ற நிலையில், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, மனம் போன போக்கில், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணியிலிருந்து நீக்குவது என்பது முன்யோசனை இல்லாத செயல். நிர்வாகத் திறமையற்ற நடவடிக்கை.

இது போதாதா?

இது போதாதா?

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் தோராயமாக ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த தாமதத்தை செய்து வருகிறது தி.மு.க அரசு. இதன்மூலம் 42 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சம்பளம் கோடிக்கணக்கில் மிச்சப்படுத்தப்படுகிறது. இது போதாது என்று, கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், அதற்காகவே நியமனம் செய்யப்பட்ட 2,500 செவிலியர்களை பணியிலிருந்து நீக்கி தி.மு.க அரசு ஆணை பிறப்பித்து, செலவை குறைத்துள்ளது.

சேவையை குறைக்கும் திமுக

சேவையை குறைக்கும் திமுக

செலவை குறைக்கிறேன் என்ற போர்வையில் சேவையை குறைக்கும் தி.மு.க அரசின் மக்கள் விரோதச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டு, அதன்மூலம் 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்துவிட்டது, 'நிதிப் பற்றாக்குறை' குறைந்துவிட்டது என்று வருகின்ற நிதிநிலை அறிக்கையில் பெருமை பேசிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது. வருவாயைப் பெருக்கி அதன்மூலம் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறப்பான பொருளாதாரக் கொள்கை. அதை விட்டுவிட்டு மக்களின் வயிற்றில் அடித்து வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை குறைப்பது என்பது தவறான பொருளாதாரக் கொள்கை.

மக்கள் விடும் கண்ணீர்

மக்கள் விடும் கண்ணீர்

இந்தத் தவறான பொருளாதாரக் கொள்கையை தி.மு.க அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மக்களை வாழ வைக்கத்தான் மக்களாட்சியே தவிர, மக்களை துன்புறுத்துவதற்கு அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி அதற்கேற்ப ஆட்சியை தி.மு.க அரசு நடத்த வேண்டும். இல்லையெனில், துன்பத்தினால் மக்கள் விடும் கண்ணீர், தி.மு.க 'குடும்ப' ஆட்சியை விரைவில் வீழ்த்திவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+