சுட சுட தயாரான "லிஸ்ட்".. இவ்ளோ பேரா? பொதுக்குழுவை தடுக்க ஓபிஎஸ் "புது ப்ளான்" - எடப்பாடி ஷாக்
சென்னை: நீதிமன்ற தீர்ப்பால் அதிமுகவின் முந்தைய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை கனவை தகர்த்த ஓ.பன்னீர்செல்வம் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தையும் தடுப்பதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது. கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

தடுக்க முயலும் ஓபிஎஸ் தரப்பு
இதன் தொடர்ச்சியாக இருதரப்பினரும் போஸ்டர்கள், பேட்டிகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவிக்கையில், "தலைமை கழகம் என்ற பெயருடன் பொதுக்குழுவுக்கு அழைப்பது முறையல்ல. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்தபோது பொருளாளர் பொறுப்பில் இருப்பவரிடமே சின்னம் வழங்கப்பட்டது. அவருக்குதான் கட்சியை வழிநடத்தும் அதிகாம் உள்ளது." என்றார்.

மாஜிக்களை வளைக்க திட்டம்
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை அதிமுகவிலிருந்து அவராலும், அவரது ஆதரவாளர்களாலும் ஓரம்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தயாரித்து இருக்கிறதாம். அவர்களை சந்தித்து ஆதரவுகோரும் ஓபிஎஸ் தரப்பு, தங்கள் கையில் கட்சி வந்துவிட்டால் எதிர்பார்க்கும் பொறுப்புகளை வழங்கவும் தயார் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தங்கள் பக்கம் வருவார்கள் என்பது ஓ.பி.எஸ். தரப்பின் யுக்தி. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
