"மாஸ்டர் மைண்ட்" சீனா.. உயிரை பறிக்கும் கடன் செயலிகள்.. பின்னிருந்து இயக்கும் "கைகள்".. ஜாக்கிரதை!
சென்னை: சமீப நாட்களாக ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
இந்த கடன் செயலிகள் எளிதாக கடன் கொடுப்பதைப் போல கொடுத்துவிட்டு அதற்கு பிறகு அதிக பணம் கேட்டு கொடுக்கும் தொல்லைகளால் தற்கொலைகள் பல நடந்திருப்பது அவ்வப்போது செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த கடன் செயலிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என பல விஷயங்களை ஆங்கில செய்தி ஊடகமான 'News 18' தொடராக வெளியிட்டு வருகிறது. அதிலிருந்து பெறப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான குற்றங்கள் பல்கி பெருகி இருந்தன. உதாரணமாக இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இதனை தடை செய்வதாக அரசு அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மற்றொரு பூதாகரமாக கிளம்பியதுதான் ஆன்லைன் கடன் செயலிகள். பணத்தின் தேவை எப்போதும் மக்களுக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது.
அதுவும் கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொது முடக்கம், இதனால் ஏற்பட்ட வேலை இழப்பு, வருவாய் இழப்பு, அதன் பின்னர் உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்டவை மக்களிடையே பணத்திற்கான தேவையை கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில், தேவைக்கு உடனடியாக கடன் கொடுக்கும் செயலிகள் புதிதாக முளைக்கத் தொடங்கின. இதன் நோக்கம் எவ்வித உத்தரவாதங்களும் இல்லாமல் உடனடியாக கடன் வழங்குவது என சொல்லப்படுகிறது.
ஆனால், இதன் உண்மையான நோக்கம் என்பது தொடக்கத்தில் தேவைக்கேற்ப கடன் கொடுத்துவிட்டு பின்னர் அதனைவிட அதிகமான தொகைகளை கேட்டு வற்புறுத்துவது என்பதுதான் என இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு கடன் பெற்று பின்னர் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக தொகையுடன் அடைக்க முடியாத நபர்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப்பிங் செய்து கடன் பெற்றவர்களின் செல்போனில் உள்ள தொடர்பு எண்களுக்கு அனுப்பி வைப்பது என பல முறைகேடுகளில் இந்த கடன் செயலிகள் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக பலர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இவ்வாறு தனது புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அவரின் தொடர்பு எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இதேபோல உயிரிழப்புகள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொடர்ந்த நிலையில் இந்த கடன் செயலிக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக சீனாவை சேர்த்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்த செயலிகளுக்கு பின்னால் சீனா இருப்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் இந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் இந்த கடன் செயலிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த செயலிகளுக்கு எதிராக கடும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், விரைவில் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்த கடன் செயலிகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவை தளமாக கொண்டு இயங்கி வருவதாக சந்தேகிக்கப்படும் இந்த கடன் செயலிகளின் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி, ரா உளவு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. தெலங்கானா, உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி, பஞ்சாப், ஒடிசா மற்றும் பிற மாநில அரசுகள் இந்த கடன் செலிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு மாநில காவல்துறை அளித்த தோராயமான மதிப்பீட்டின்படி, இதுபோன்ற 1,000 கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் செயல்படுகின்றன. இவ்வாறு செயல்படும் செயலிகளின் மூலம் புழக்கத்தில் உள்ள பணம் எவ்வளவு என்பது சரியாக கண்டறிய முடியவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் ஹைதராபாத் காவல்துறையின் அறிக்கையின்படி போலி நிறுவனங்களை நடத்தும் சீன நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான 1.4 கோடி பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் 3.5 முதல் 4.8 வரையிலான ரேட்டிங்குகளுடன் உள்ள இந்த கடன் செயலிகள் 50,000 முதல் 10 லட்சம் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலிகளுக்கு போலியாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிதி பலத்தை அளிக்கிறது. இப்படி பின் நின்று ஆதரவளிக்கும் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. மேலும், டெல்லி-என்சிஆர் மற்றும் பெங்களூரின் குடியிருப்பு பகுதிகளில் ஒரே முகவரியில் இவைகள் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் ஒரு பிரமிடு போல கற்பனை செய்து பார்த்தால், அதன் உச்சியில் உள்ள சீனர்கள் இந்த செயலியை வடிவமைத்து கொடுக்கிறார்கள். இந்த செயலிகளுக்கு பேக்-அப் ஆக போலி நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்நிறுவனங்களை மேலாதிக்கம் செய்ய இந்திய கூட்டாளிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்கு உதவும் வகையில் கால் சென்டர்களில் வேலைக்காக பலர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதான் யதார்த்தம்.
குறைந்த வருவாய் கொண்ட குழுக்களை குறிவைத்து பாப்-அப் மெசேஸ்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட குழுக்களில் உள்ள நபர்களுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் கடனாக வழங்கப்படுகிறது. இந்த கடனை அவர் பெறுவதற்கு முன்னர் அதை பெறும் நபரின் கைப்பேசியில் உள்ள தொடர்பு எண்கள் உட்பட அனைத்து தரவுகளையும் கையாள்வதற்கு அனுமதி கோரப்படுகிறது. இதற்கு ஒப்புதல் அளித்த பின்னரே கடன் வழங்கப்படுகிறது.
இந்த தொகை வழங்கப்பட்ட ஒரே வாரத்தில் கடன் தொகையை விட 70-80% வரை கூடுதல் தொகையை வழங்க வலியுறுத்தி குறுஞ்செய்திகள் முதல் பல தொந்தரவுகள் தொடங்கப்படுகிறது. ஆபாச சித்தரிப்பு, சமூக வலைத்தளத்தில் அதை பதிவேற்றுவது என பல முறைகேடுகளில் செயலியின் பின்னாள் இருப்பவர்கள் ஈடுபடுவதால் இது இறுதியில் தற்கொலையில் சென்று முடிகிறது. இது குறித்து வெளியான புகார்களின் அடிப்படையில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இந்த முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு பின்னாள் இருக்கும் மற்றொரு விஷயம் என்னவெனில், இதில் முதலீடு செய்யப்படும் நிதி பெரும்பாலும் கிரிப்டோ கரன்சிகளில் செய்யப்படுகிறது. பின்னர் இது இந்திய ரூபாயாக மாற்றப்படுகிறது. இவ்வாறு பணத்தை பறிமாற்றும் நிறுவனங்களை இந்தியா சமீப காலங்களாக கவனித்து வந்த நிலையில், இந்தியாவின் முக்கிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றான WazirX இன் ரூ.64.67 கோடி மதிப்புள்ள வங்கி வைப்புகளை அமலாக்க இயக்குநரகம் சமீபத்தில் முடக்கியது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வந்தாலும் நிலைமையை இயல்பிற்கு கொண்டுவர அதிக அளவில் முயற்சிகள் தேவைப்படும் என பொருளாதார அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications