மரியாதை மாறாது.. அண்ணா அறிவாலயத்தில் ஐக்கியமான ஓபிஎஸ்.. காரில் இருந்த ஜெயலலிதா புகைப்படம்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். அப்போது அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஓபிஎஸ் காரில் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் ஓபிஎஸ் என்றும் ஜெயலலிதா விசுவாசி என்றும், தாய் கழகத்தில் இணைந்தாலும் ஜெயலலிதா மீதான மரியாதை ஒருநாளும் குறையாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
அதிமுக சார்பாக ஜெயலலிதா இருந்த போதே முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுக மூலமாக 3 முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஓபிஎஸ், தற்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அதிமுக தொண்டர் மீட்பு உரிமை கழகத்தை நடத்தி வந்த ஓபிஎஸ், அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் முன் வைக்கவில்லை. ஆனால் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.

ஓபிஎஸ்க்கு அதிமுகவின் கதவுகள் மூடப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இப்படியான சூழலில் ஓபிஎஸ் அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்கள் சேகர்பாபு, எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உள்ளே அழைத்து சென்றனர்.
இதையடுத்து ஓபிஎஸ்ஸை ஆரத்தழுவி வரவேற்ற ஸ்டாலின், திமுக கரை கொண்ட சால்வையை அணிவித்து வரவேற்றார். இதன்பின் ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுகவின் உறுப்பினர் படிவத்தை நிரப்பி ஒபிஎஸ் கையெழுத்திட்டார். அவருடன் எம்எல்ஏ ஐயப்பன், மகன் ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
இதனிடையே திமுகவில் இணைந்தாலும் ஜெயலலிதா மீதான மரியாதையை ஓபிஎஸ் மாற்றவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். ஏனென்றால் அண்ணா அறிவாலயத்திற்கு ஓபிஎஸ் வந்த காரில் கூட ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. அந்தப் புகைப்படத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மூலமாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை திமுக அறுவடை செய்யும் என்று கருதப்படுகிறது. பெரிய அளவில் இல்லையென்றாலும், தொகுதிக்கு 2 ஆயிரம் வாக்குகளை ஓபிஎஸ் மூலமாக திமுகவால் எளிதாக பெற முடியும். குறிப்பாக ராமநாதபுரம், நெல்லை, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications