யு டர்ன் போட்ட கொரோனா தொற்று.. நாடு முழுவதும் பாதிப்பு 4000ஐ கடந்தது! மக்கள் அச்சம்
சென்னை: நாடு முழுவதும் நேற்று 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகாரிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு 'ஜேஎன் 1' எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில், நேற்று மட்டும் 628 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில், கோவா 34, மகாராஷ்டிரா 9, கர்நாடகா 8, கேரளா 6, தமிழகம் 4, தெலங்கானா 2 என நாடு முழுவதும் மொத்தம் 63 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 4,054ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வின் முடிவுகள் வெளியான பின்னர்தான் 4 பேருக்கு ஏற்பட்டிருப்பது எந்த வகை தொற்று என்பதை உறுதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications