அழியும் நிலையில் அரிய பன்றி முகம் கொண்ட தவளை.. தமிழக அரசு தொடங்கிய பாதுகாப்பு மிஷன்
சென்னை: பன்றி முகத்தில் தவளைகளா? பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த தவளைகள் எங்கே உள்ளன? எங்கே வாழும்? தெரியுமா.. டைனோசர்கள் காலத்து வாழும் புதைபடிவமாக விளங்கும் இந்த பன்றி முக ஊதா தவளைகள், தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வேகமாக அழிந்து வருகிறதாம்.. . அவற்றின் எஞ்சிய வாழ்விடங்களைக் கண்டறிந்து பாதுகாக்கத் தமிழக அரசு இப்போது அதிரடியாக ஒரு முன்னெடுப்பை செய்துள்ளது.. அது என்ன தெரியுமா?
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய அரியவகை விசித்திரமான உயிரினம்தான் இந்த ஊதா தவளை.. இதன் மூக்கு பார்ப்பதற்கு கூர்மையாக பன்றி போலவே இருக்கும்.. தடித்த உடலமைப்பையும் கொண்டிருக்கும். அதனால்தான், இதனை "பன்றி முக தவளை' என்று சொல்கிறார்கள்.

பன்றி முகத்தில் தவளைகள்
டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே பூமியில் பரிணாம மாற்றங்களின்றி வாழ்ந்து வருவதால் "வாழும் புதைபடிவம்" என்றும் இதனை அழைக்கிறார்கள்.. தன் வாழ்நாளின் 95 சதவீதத்திற்கும் மேலான நாட்களை பூமிக்கு அடியில் 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்திலேயே கழிக்கிறதாம் இந்த உயிரினஙம..
வருஷத்துக்கு வெறும் 2 வாரங்கள் மட்டுமே பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வரும் இந்த தவளைகள், காடு அழிப்பு, மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால் தங்களின் வாழ்விடங்களை இழந்து விட்டன.. அதனால்தான் சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழிய வாய்ப்புள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பூபதியின் ஊதா தவளை
இந்த விசித்திரமான தவளைக் குடும்பத்தில், 2017ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் ஐதராபாத் சி.சி.எம்.பி (CCMB) விஞ்ஞானிகளால் "பூபதியின் ஊதா தவளை" (Nasikabatrachus bhupathi) என்ற ஒரு புதிய இனம் கண்டறியப்பட்டது. மறைந்த இந்திய தவளையின ஆராய்ச்சியாளர் எஸ். பூபதியின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த தவளை, தோற்றத்தில் முந்தைய ஊதா தவளையைப் போலவே இருந்தாலும், அறிவியல் உலகில் கண்டங்களின் நகர்வுக் கோட்பாட்டிற்கு (Continental Drift Theory) மிக முக்கிய உயிரியல் ஆதாரமாகத் திகழ்கிறது.
இதன் நெருங்கிய மரபணு தொடர்புகள் இந்திய பெருங்கடலில் உள்ள சீஷெல்ஸ் தீவுத் தவளைகளுடன் ஒத்துப்போவதால், சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டமும் சீஷெல்ஸும் "கோண்ட்வானா" என்ற ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்ததை இந்த தவளையின் இருப்பு அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.
தமிழக வனத்துறை அதிரடி
இந்த அளவுகக்கு வரலாற்று பின்னணியும் விசித்திர குணங்களும் கொண்ட இந்த அரிய வகை ஊதா தவளைகளை மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.. இதற்காகவே இப்போது ஒரு முக்கியமான திட்டத்தையும் கையிலெடுத்துள்ளது.
பொதுவாக புலி, சிங்கம் போன்ற பெரிய விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, சமீபகாலமாக நீர்நாய், முள்ளெலி, குள்ளநரி போன்ற சிறிய வகை அரிய உயிரினங்களை காப்பதில் வனத்துறை அதிகமாகவே ஆர்வம் காட்டி வருகிறது. அந்த லிஸ்ட்டில் இப்போது இந்த பன்றி முக தவளைகளையும் முழுமையாகப் பாதுகாக்கப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அரிய விலங்குகள் பாதுகாப்பு லிஸ்ட்
மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் ஊதா மற்றும் சாம்பல் நிறத்தில் பன்றியின் முக அமைப்போடு உலா வரும் இந்த தவளைகள், காடுகள் அழிவதாலும் நிலத்தடி வெப்பம் அதிகரிப்பதாலும் வேகமாக அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இந்த ஆபத்தான சூழலை தடுக்க, அழியக் கூடிய நிலையில் இருக்கும் அரிய விலங்குகள் பாதுகாப்புப் பட்டியலில் இந்த தவளைகளையும் சேர்க்கத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக, இந்த தவளைகள் தற்சமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் எந்தெந்த பகுதிகளில் எஞ்சியிருக்கின்றன என்பதை கண்டறியும் கணக்கெடுப்புப் பணிகளும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான விரிவான அறிவியல் பூர்வ ஆய்வுகளும் வனத்துறையால் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளனதாம்..!!


Click it and Unblock the Notifications
