ராமதாஸ் பேச்சை வேத வாக்காக ஏற்று செயல்பட்ட பாமகவினர்! 20,827 மரக்கன்றுகள் நடப்பட்டதாக பெருமிதம்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஓராண்டில் மட்டும் 20,827 மரக்கன்றுகளை அவரது கட்சியினர் நட்டுள்ளனர்.
மரம் நடும் அறமே மாபெரும் அறம் எனும் இயக்கத்தை கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
இதனிடையே இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு;
ரயில் நிலையங்களா? இந்தி திணிப்பு மையங்களா? மத்திய அரசின் மறைமுக இந்தி திணிப்பு.. ராமதாஸ் கோபம்

மரம் நடும் அறம்
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கினார்.

திருமண நாள் -பிறந்தநாள்
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் இணை, சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டவர்கள் அதன் புகைப்படத்தை மருத்துவர் ராமதாசுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களை மருத்துவர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளிலும் கூட
அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் 2022 நவம்பர் 29-ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் மொத்தம் 302 நாட்களில் 2551 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 20,827 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். பல பாட்டாளிகள் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் பலர் மரக்கன்றுகளை நட்டு, அதற்காக ராமதாஸிடம் வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.

கணக்கில் சேர்க்கப்படவில்லை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கொரோனா தொற்று காரணமாகவும், பிற உடல் நல பாதிப்புகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் காரணமாகவும் 63 பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து கூறவில்லை. அந்த காலத்திலும் பாட்டாளி சொந்தங்கள் மரக்கன்று நட்டனர். ஆனால், இவை இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.