PMK Ramadoss: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது [PMK Ramadoss].
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அடுத்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார்.

அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும். அநேகமாக மார்ச் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார். ராமதாஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் இருவரும் நாங்கள் தான் உண்மையான பாமக என்று கூறி வந்தனர். இதற்கிடையே தான் அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவின் சின்னமான மாம்பழம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் தங்களிடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணி தான் பாமகவின் தலைவர். அன்புமணி ராமதாஸ்க்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்று விளக்கமும் அளித்தது. இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்க வேண்டும் என்று ராமதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கவும் மனுவில் கோரியிருந்தார் ராமதாஸ். ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் அருள் தனது வாதங்களை முன்வைத்தார். 2022 ஆம் ஆண்டு அன்புமணி நியமிக்கப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
அதற்குப் பிறகும் அன்புமணி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்து பதவியில் இருந்து வருவதாக வாதிட்டார். தொடர்ந்து அவர் பதவியில் இருக்க தகுதியில்லை என்றும் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தந்தை, மகனுக்கு இடையிலான இந்தப் பிரச்சனையை குறித்து வழக்கறிஞர் கூறியபோது நீதிபதி சிரித்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்குத் தொடர்பாக உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவு குறித்து வழக்கறிஞர் கூறினார். உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அணுகச் சொல்லியிருப்பதால் கீழமை நீதிமன்றத்தைத் தான் நீங்கள் அணுக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, தந்தை சொல்லை கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications