எடப்பாடி கனவு கனவுதான் போலயே! கூட்டணியை உடைக்கும் சீனியர்கள்! விலகிச் செல்லும் பாமக! நிலவரம் கலவரம்!
சென்னை : கடந்த சில நாட்களாகவே அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி உண்டாவது போல கூட்டணி தொடர்பாகவும் கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் முக்கிய கட்சியான பாமகவின் நிலைப்பாடு என்ன என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நெருக்கடிகளை சந்திப்பது ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிது அல்ல. முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற போதில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நெருக்கடியை சந்திப்பதே அவருக்கு வாடிக்கையாக உள்ளது.
எந்த நேரத்தில் சசிகலா அவரை முதல்வராக அறிவித்தாரோ அப்போதிலிருந்தே தற்போது வரை நெருக்கடிகளை சந்திப்பதும் சவால்களை சமாளிப்பதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பழக்கமாகிவிட்டது. அது தற்போது வரை தொடர்கிறது.

அதிமுக விவகாரம்
ஆட்சி அமைக்க ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைத்துச் சென்ற அவர் ஆட்சி முடிந்த பிறகு தற்போது கிடைத்த ஐந்து ஆண்டுகளை தனது தலைமையை நிரூபிக்க வேண்டிய தருணமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து வெளியேறியதோடு அதிமுகவின் அடுத்த முகமாக தன்னை முன்னிறுத்துக் கொள்ள வேண்டும் என தீவிரம் காட்டுகிறார். அதே நேரத்தில் ஜெயலலிதா காலத்திலேயே இரண்டு முறை முதல்வராக இருந்து அவரது மறைவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடுத்த தலைமை நான் தான் என போர்க்கொடி தூக்கி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
ஆட்சியில் எடப்பாடி இருந்தபோது இன்று அவரது ஆட்சி கவிழ்ந்து விடும் நாளை அவரது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற கணிப்புகளை தவிடு பொடியாக்கி நான்காண்டுகளை முழுமையாக நிறைவு செய்தார். இதனால் தற்போதும் எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதனை சமாளிக்க முடியும் என நம்புகிறார். அதிமுகவிற்குள் தான் இந்த பிரச்சனை என்றால் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு நெருக்கடிகள் எழுந்து வருகிறது. பாஜக கூட்டணி கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் மேலும் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டவரை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என அக்கட்சி விரும்புவது எடப்பாடி பழனிச்சாமிக்கு உடன்பாடு இல்லை. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற வேண்டுமானால் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அந்த கட்சி விரும்புகிறது.

அதிமுக கூட்டணி
ஆனால் எடப்பாடி தரப்பு முன்னால் அமைச்சர்களோ தொடர்ந்து பாஜகவையும் பாமகவையும் விமர்சித்து வருகின்றனர். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி கூறியதிலிருந்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் எடப்பாடி தரப்பு சீனியர்கள் பேசுவதை பார்த்தால் அந்த மாதிரி கூட்டணி அமையும் என்ற கேள்வி எழுகிறது. மேலும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸ் வந்தால் நிச்சயம் பாஜக அந்த கூட்டணி இடம் பெறாது விடுதலை சிறுத்தைகள் வந்தால் நிச்சயம். பாமக அந்த கூட்டணியில் இருக்காது இப்படி பல்வேறு நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது பாமக தான் என பேசினார். இதனால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என அக்கட்சியினர் கூறியிருந்தனர். உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த கட்சி தனித்தே போட்டியிட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணி மீண்டும் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் பேச்சு அதிமுக சீனியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

ஜெயக்குமார்
இதை அடுத்து எடப்பாடி தரப்பு சீனியரான ஜெயக்குமார் அதிமுகவால் தான் அன்புமணி ராமதாஸ் எம்பி பதவி கிடைத்தது. பாமகவை ஏற்றி வைத்த ஏணியே அதிமுக தான் அதிமுக இல்லை என்றால் பாமக கிடையாது என அதிரடி காட்டினார். இது தொடர்பாக பேசிய பாமக செய்தி தொடர்பாளர் பாலு பாமக குறித்து விமர்சிக்கும் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கவனம் தேவை அவரின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

விலகல்
அதிமுக பிளவு ஏற்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்த கருத்து குழந்தைக்கு கூட தெரியும். மேலும் ஜெயலலிதாவை பாமக உடன் கூட்டணி வைக்க வழி மேல் விழி வைத்து காத்திருந்தார் என கூறினார். இதனால் அதிமுக சீனியர்கள் மேலும் கொந்தளிப்பு அடைந்த நிலையில் அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாமக அதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. வரும் தேர்தலிலும் கூட்டணி அமையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிச் சென்று விட்டது என்றே கூறுகின்றனர் விவரம் தெரிந்த அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications