4 அமைச்சர்களின் துறை மாற்றம்.. 3 பேரின் இலாகா உதயநிதிக்கு.. அமைச்சரவையில் நடக்கப்போவது இதானா? பரபர!
சென்னை : உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதோடு, அமைச்சரவையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பரபர தகவல்கள் கசிந்து வருகின்றன. 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாகவும், 3 பேரின் இலாகாக்கள் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வரும் டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்காக 3 அமைச்சர்களின் இலாகாக்கள் வாங்கப்பட்டு அவருக்கு அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் உதயநிதி
திமுக கடந்தாண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே, உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும்போது இந்தக் குரல் மேலும் வலுத்தது. திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது அதற்கு முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி, தேதியும் குறித்துவிட்டதாகத் தெரிகிறது. வரும் 14ஆம் தேதி அமைச்சரவையில் உதயநிதி இணையவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

முக்கியமான இலாகாக்கள்
சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாகாக்கள் பறிக்கப்பட்டு, அவை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மகளிர் உரிமைத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்கள் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், முக்கியமான துறைகளை உதயநிதி ஸ்டாலின் கையில் வைத்திருப்பார்.

2 அமைச்சர்கள் + முதல்வர் இலாகா
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கையில் இருக்கிறது. மகளிர் உரிமைத்துறை, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கையில் இருக்கிறது. வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய துறைகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கையில் இருந்தது. இந்த மூன்றோடு, முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பில் இருக்கும் சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம் ஆகிய இலாகாவும் உதயநிதியின் கைக்குச் செல்ல இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலேஜ் ஏறும்
இளைஞர்களை கட்சி நோக்கி ஈர்க்கும் பணிகளில் வேகம் கூட்ட இளைஞர் நலன் துறை, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கங்கள், சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் இருக்கும் நிலையில் விளையாட்டுத் துறை ஆகியவற்றை உதயநிதிக்கு கொடுத்தால் மைலேஜ் ஏறும் என்பது முதல்வர் ஸ்டாலினின் கணக்காம். இன்னும் சில மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்னென்ன பணிகள்
உதயநிதிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கத்தின் கீழ் மாநில திட்டக்குழு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும், வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்களில் சுய உதவிக் குழு இயக்கம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்வாதார மேம்பாடு, மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் பயிற்சி ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

சீனியர் அமைச்சர்
சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவுத்துறையை தனக்கு கொடுத்து விட்டதாக அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அவருக்கு வேறு முக்கியமான துறையை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். அந்தவகையில், வருவாய்த்துறையை வழங்க திட்டமிட்டிருந்தார். கூட்டுறவுத்துறையை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாற்றிவிடலாம் என நினைத்த நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தென்காசியிலேயே முதல்வரிடம் பேசி, தனது துறையை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம்.

அமைச்சர்களின் துறை மாற்றம்
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையைக் கையில் வைத்திருக்கும் கே.ஆர்.பெரியகருப்பனிடம் இருந்து அந்த துறையை ஐ.பெரியசாமிக்கு வழங்கிவிட்டு, கூட்டுறவுத்துறையை கே.ஆர்.பெரியகருப்பனுக்கு மாற்ற இருக்கிறாராம் ஸ்டாலின். இதேபோல, நீலகிரி மாவட்ட அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் இருக்கும் வனத்துறை மதிவேந்தனுக்கும், மதிவேந்தனிடம் இருக்கும் சுற்றுலாத்துறை ராமச்சந்திரனுக்கும் மாற்றப்பட இருக்கிறதாம்.

மேலும் சிலர் இலாகாக்களும்
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் கையில் இருக்கும், சிஎம்டிஏ இலாகா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கூடுதலாக வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

என்னென்ன மாற்றங்கள்?
அதாவது, ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகிய 4 பேரின் துறைகள் மாற்றப்பட உள்ளதாகவும், முத்துசாமி, மெய்யநாதன், கீதா ஜீவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடமிருந்து ஒவ்வொரு இலாகா எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற யாரின் இலாகாவிலும் கை வைக்கப் போவதில்லை என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்தளவுக்கு உறுதியான தகவல் என்பது மிகவிரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications