விஜய்க்கு டாடா பாய் -பாய் சொன்ன பிரசாந்த் கிஷோர்! தவெக ஆலோசகர் பொறுப்பில் திடீர் விலகல்.. பின்னணி
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகி உள்ளதாகவும், அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அவர் காய் நகர்த்தி வருகிறார். நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவுப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி முதல்வர் வேட்பாளர் விஜய் என்று செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற கட்சிகளுடன் கூட்டணி இல்லை. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்ற மெசேஜ் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தவெகவில் விஜயின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விடுபட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் பீகாரை சேர்ந்தவர். அங்கு அவர் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். பீகார் சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் பிரசாந்த் கிஷோர் தீவிரம் காட்ட உள்ளார்.
இதனால் வரும் நவம்பர் மாதம் வரை விஜயின் ஆலோசனை வழங்காமல் பிரசாந்த் கிஷோர் விலகி உள்ளார். அதன்பிறகு மீண்டும் விஜய்க்கு, ஆலோசனை வழங்குவது பற்றி நவம்பர் மாதத்துக்கு பிறகு முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயும் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் தவெகவிற்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் விலகி உள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தவெகவின் முதலாமாண்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக பங்கேற்றார். அப்போது பிரசாந்த் கிஷோர் பேசும்பாது, ‛‛விஜய்க்கு வியூகம் தொடர்பான உதவிகள் தேவையில்லை. அவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமில்லை. அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை விரும்பும் மில்லியன் இளைஞர்களுக்கானதாக தவெக உள்ளது. இந்த கட்சியும், கட்சியை வழிநடத்தும் விஜயும் மாற்றத்தை எதிரொலிக்க உள்ளனர்'' என்று கூறினார்.
விஜயின் ஆலோசகர் பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகி இருந்தாலும் கூட தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் ‛வாய்ஸ் ஆப் காமன்ஸ்' எனும் தேர்தல் வியூக வகுப்பு குழுவினர் விஜயுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தற்போது தவெகவிற்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இதனால் விஜய்க்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஆட்கள் சரியாக உள்ளது.












Click it and Unblock the Notifications