ஆன்லைன் சூதாட்ட தடை.. கொள்ளை லாபம் பெறும் நிறுவனங்கள் சும்மா விடமாட்டாங்க! ஆர்பி உதயகுமார் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில் ‛‛ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டம் நிறைவேற்றி விட்டார்கள் என கடந்து செல்லமாட்டார்கள்'' என அதிமுகவின் ஆர்பி உதயக்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபட்டு பணத்தை இழந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துரு தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்பு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
இந்த குழு 2022 ஜூன் இறுதியில் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஆர்என் ரவி இந்த மாதம் ஒன்றாம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ஆன்லைன் விளையாட்டுக்கான ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது.

தண்டனைகள் என்ன?
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இரட்டி தண்டனை அளிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்பி உதயக்குமார் பேட்டி
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் கொண்டு வர நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இது காலம் தாழ்த்திய நடவடிக்கை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறியதாவது:

கண்துடைப்பாக இருக்க கூடாது
ஆன்லைன் சூதாட்டத்தில் 5 ஆயிரம் கோடிக்கு மேல் பணபரிவர்த்தணையில் ஈடுபட்டு கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்கள், சட்டம் நிறைவேற்றிவிட்டார்கள் என கடந்து செல்லமாட்டார்கள். கடந்த முறை அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த சட்டத்தை நீதிமன்றத்தில் கோட்டை விட்டது போலவும், அமைதியாக இருந்து பின்வாங்கியது போல இப்போதும் இருந்து விடக்கூடாது. ஒரு கண்துடைப்பு நாடகமாக இந்த சட்டம் இருந்து விடக்கூடாது.

நிரந்தர சட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் விலைமதிக்க முடியாத கடவுளின் பரிசான இளைஞர்களின் உயிர் பலி இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தற்போது அவசர சட்டம் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே எதிர்கால இளைஞர்களை பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் உயிர் பலி ஏற்படாது என்பதை உறுதி அளிக்கும் வகையிலும் நிரந்தர சட்டம் உருவாக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications