புலி கோழியாகி போச்சே.. அவ்ளோ பெரிய ஆள்.. ஈபிஎஸ் பின்னால் போவது அசிங்கம்! 'மாஜி'யை சீண்டிய புகழேந்தி!
சென்னை : "செங்கோட்டையன் சிங்கம் போல், புலி போல் எல்லாம் இருக்க வேண்டாம். ஆனால், சின்ன கோழி போல் ஆகிவிட்டார் என்பதைப் பார்த்துத்தான் வருத்தப்படுகிறேன். ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமி இவர் பின்னால் ஓடுவார். அதை என் கண்ணால் பார்த்துள்ளேன்" என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளார்.
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் திமுகவுக்கு செல்ல முக்கிய காரணம் செங்கோட்டையன் தான் என புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும், ஈபிஎஸ்ஸை வாடா எனக் கூப்பிடும் அளவிற்கு இருந்த செங்கோட்டையன் இன்று சின்ன கோழி போல் ஆகிவிட்டார் என்பதைப் பார்த்து தான் வருத்தப்படுகிறேன் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தலைமையில்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை நாங்கள் வகிக்க மாட்டோம் எனக் கூறிவிட்டு தற்போது பொதுச் செயலாளராக பதவி பெற துடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமையாக ஏற்று எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்." எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பின்னால்
மேலும் பேசிய புகழேந்தி, "பெரிய தலைவராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்தவர் தற்போது எடப்பாடி பழனிசாமி பின்னால் செல்வது வேதனையாக உள்ளது. செங்கோட்டையனை நான் இன்னும் மதிக்கிறேன். வயதில் பெரியவர். எடப்பாடி பழனிசாமி பின்னால் போகும் அசிங்கமான நிலை செங்கோட்டையனுக்கு உருவாகிவிட்டது என்பதை நினைப்பதற்குத்தான் வேதனையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தவர் செங்கோட்டையன்? அவரைப் பார்த்து நான் கேட்பது ஒன்றைத்தான்.

அமைச்சராக்கியது யார்
தீரன் சின்னமலை வழிவந்தவர்கள் எல்லாம் என்றும் நியாயமாக இருப்பார்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செங்கோட்டையன் சொல்லட்டும். அவரை யார் அமைச்சராக்கியது? ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு எங்கேயோ தூக்கி எறியப்பட்ட அவரை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் சசிகலா தான் அமைச்சராக்கினார். ஆனால், இன்று சாதிப்பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கிவிட்டார் செங்கோட்டையன்.

கோழி போல ஆகிவிட்டார்
ஈரோட்டில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் டெபாசிட் பெறுங்கள். செங்கோட்டையன் சிங்கம் போல், புலி போல் எல்லாம் இருக்க வேண்டாம். ஆனால், சின்ன கோழி போல் ஆகிவிட்டார் என்பதைப் பார்த்துத்தான் வருத்தப்படுகிறேன். ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமி இவர் பின்னால் ஓடுவார். அதை என் கண்ணால் பார்த்துள்ளேன். வாடா எனக் கூப்பிடும் அளவிற்கு இருந்தவர். இன்று எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து செங்கோட்டையன் பயப்படுகிறார்" எனப் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications