சென்னை மவுண்ட் ரோடு தலப்பாகட்டி பிரியாணி கடை உணவில் பூரான்! அதிர்ந்த மதுரைக்காரர்!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பூரான் கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை மவுன்ட்ரோடில் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் இயங்கி வருகிறது. இங்கு மதுரையை சேர்ந்த இளையராஜா, அவருடைய நண்பர்கள் சாப்பிட சென்றனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இறந்த நிலையில் பூரான் கிடந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இளையராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். வந்த இடத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள கடையில் சாப்பிட்டோம். முதலில் ஸ்டார்ட்டர்ஸை ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.
பிறகு வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தோம். அதை சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது அந்த உணவில் பூரான் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கடைக்காரர்களிடம் கேட்ட போது, "சார் தெரியாமல் நடந்துவிட்டது. நீங்கள் சாப்பிட்ட பணத்திற்கு டிஸ்கவுன்ட் கொடுக்கிறோம். இதை கண்டும் காணாதது போல் சென்றுவிடுங்கள்" என கூறிவிட்டார்.

இதனால் நாங்கள் மேலும் அதிர்ச்சி அடைந்து கூகுளில் தேடி இந்த ஏரியாவுக்குரிய உணவு பாதுகாப்பு அதிகாரி யார் என கண்டறிந்து அவருக்கு போன் செய்தோம். அந்த போன் எண்ணில் பேசிய அதிகாரி, சரியான பதிலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 100-க்கு போன் செய்து போலீஸை வரவழைத்தோம்.
இரவு 2 மணி வரை கடை இருக்குமாம். ஆனால் இந்த பிரச்சினையால் சீக்கிரமாகவே கடையை மூடிவிட்டார்கள். நாங்கள் சாப்பிட்ட டேபிளுக்கு எதிர் டேபிளில் உட்கார்ந்திருந்த குழந்தையும் இதை சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்துவிட்டது.நீங்கள் சிசிடிவி காட்சிகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பூரானை காட்டி அவர்களது பெற்றோர் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்த போது அவர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பணம் வாங்காமலேயே அனுப்பிவிட்டார்கள். காவல் துறை வந்ததும்தான் எங்களுக்கு பில் கொடுத்தார்கள். இல்லாவிட்டால் பில்லை கொடுக்க மாட்டோம் என கூறி மறுத்தனர்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரியே உணவக உரிமையாளர்களுக்கு இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என இளையராஜா வேதனையுடன் தெரிவித்திருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கேஎஃப்சி உணவு கடையில் சிக்கன் வேகாமல் ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடையில் வாக்குவாதம் செய்த நிலையில் அவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications