மாநில அளவில் முதலிடம் யார்? பள்ளிக் கல்வித்துறை முடிவுக்கு முரணாக நடந்த முதல்வர் விஜய், ராஜ்மோகன்!
சென்னை: தவெக கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் இருவருமே பள்ளிக்கல்வித்துறை முடிவு மற்றும் நடைமுறைக்கு முரணாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடக் கூடாது என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வரும் சூழலில், அமைச்சர் ராஜ்மோகன் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவியை அறிவித்திருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கியதில் இருந்து அக்கட்சி தரப்பில் கல்வி விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தவெக கல்வி விருது விழா வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. ஆனால் இம்முறை ஆளுங்கட்சியாக இருந்து தவெக கல்வி விருது விழாவை நடத்தி இருப்பது கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நேற்றைய கல்வி விருது விழாவில் 12ஆம் வகுப்ப் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூரைச் சேர்ந்த மாணவி ரிக்ஷிதாவிற்கு முதல்வர் விஜய் தங்க நெக்லஸ் அணிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டது அமைச்சர் ராஜ்மோகன் தான். இந்த சம்பவம் தான் சர்ச்சைக்கான தொடக்க புள்ளியாக அமைந்தது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் 2017ல் இருந்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகளின் விவரங்களை வெளியிட கூடாது என்ற கொள்கையை பள்ளிக்கல்வித்துறை பின்பற்றி வருகிறது. ஆனால் நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனே நேரடியாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி என்று அறிவிப்பை வெளியிடுகிறார்.
பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் போராடி மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற நிலைக்கு தமிழக அரசை கொண்டு வந்தனர். இதனால் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் போட்டியும், அதனை வைத்து தனியார் பள்ளிகள் விளம்பரங்கள் செய்வதும் ஒரு காரணமாக அமைந்தது.
அதேபோல் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதும், தேவையில்லாத அழுத்தமும் இருந்தது. இந்த நடைமுறையால் மாணவர்கள் எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வுகளை எதிர்கொண்டு வந்தனர். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்களை வெளியிட கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்ததே 2017ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான்.
தற்போது அவர் தவெகவில் தான் இருக்கிறார். அவராவது இப்படியொரு நடைமுறை இருக்கிறது என்பதை சொல்லி இருக்கலாம். இதனால் முதல்வர் விஜய் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரத் தொடங்கியுள்ளன. இதனால் வரும் காலங்களில் தவெக கல்வி விருது விழாவை அக்கட்சியின் வேறு மாதிரி நடத்த ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
