"200 அரசு அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.." ராகுல் காந்தி சொன்ன பரபரப்பு தகவல்!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரசு அதிகாரிகள் போலீசார் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்து தகவல்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடைபெறுகிறது. பேரணிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மோடி அரசையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் மிக கடுமையாக விமர்சித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்டம் ஒருநாள் நிகழ்வாக முடிந்துவிடாது என்றும் தொடர்ந்து நடைபெறும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசில் பணியாற்றும் 200 அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும், "ஞானேஷ் குமாருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பேரணியுடன் முடிவடையாது. இது இன்று ஒரு நாள் மட்டும் நடக்கும் போராட்டம் இல்லை. இது தொடர் போராட்டம், அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஞானேஷ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும், போராட்டக்காரர்களை குறிவைக்கவும் தங்களுக்கு ஏன் உத்தரவிடப்படுகிறது என்று போலீசாரே கேட்கிறார்கள்" என்றார்.
ராகுல் காந்தி
தலைமை தேர்தல் ஆணையர் தவறு செய்துள்ளதாக சாடிய ராகுல் காந்தி, மோடி அரசில் வேலை செய்யும் 200 அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். எனினும் அந்த அதிகாரிகள் யார், அவர்கள் எந்த துறைகளை சேர்ந்தவர்கள், என்ன மாதிரியான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறித்து அவர் கூடுதல் விவரங்களை பகிரவில்லை.
போலீசார் குழப்பம்
இந்தியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை தாக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அவர் மேலும், "இளைஞர்களை தாக்கும்படி எங்களுக்கு ஏன் உத்தரவிடப்படுகிறது? என்ற கேள்வி போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு துணை ராணுவ படைகளில் வேலை செய்வோரும் இதே கேள்விகளை தான் கேட்கிறார்கள்.
அரசு அதிகாரிகள்
போலீசாரில் வேலை செய்வோரில் சுமார் 50 சதவீதம் பேர் நீங்கள் செய்வது சரியானது என எங்களிடமே சொல்கிறார்கள்... தொடர்ந்து இதை செய்யுங்கள் என்று எங்களிடம் கூறுகிறார்கள்" என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்து இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் பேசுபொருளாகியுள்ளது.
எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டார் என்பதே பிரதான குற்றச்சாட்டு. இது தொடர்பாக பிற தேர்தல் ஆணையர்கள் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் இதை பெரிதாக எடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது.




Click it and Unblock the Notifications
