2டிஜி கொரோனா மருந்து பவுடர் தண்ணீரில் கலக்கி குடிக்கலாம் - ராஜ்நாத்சிங், ஹர்சவர்த்தன் அறிமுகம்
மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி 2 DG எனும் கொரோனா தடுப்பு மருந்து இன்று முதல் மருத்துவமனைக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னை: கொரோனா நோயாளிகள் தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்சவர்த்தனர் ஆகியோர் 2டிஜி மருந்தை இன்று அறிமுகம் செய்தனர். டி-டியோக்ஸி டி-குளுகோஸ் ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ், டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது. 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து இன்று முதல் மருத்துவமனைக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவிற்கு இரண்டரை கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க கோவாக்சீன்,கோவிஷீல்டு, ஸ்புட்னிக் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொனாரோவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.
2டிஜி மருந்து குறித்து சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.
இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கொரோனா நோயாளிகள் மீது நடத்தினர்.
2வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்ததையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கொரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது.
இந்த 3வது கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2டிஜி மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாகச் செயல்படுகிறது, ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது. ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.
இந்தநிலையில் 2டிஜி மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த 2டிஜி கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் சப்ளை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications