Ration Shops: ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை.. தமிழக அரசு உத்தரவு.. ஒரு ட்விஸ்ட்
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களே.. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைக்கு போகலாமா, வேண்டாமா என்று யோசிக்கிறீங்களா? வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறைதான்.. ஆனால், இந்த வாரம் அப்படி இல்லை. ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், இதற்கு ஈடாக இன்னொரு நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நேரடியாகவே பலன் பெற்று வருகிறார்கள்.

ஆயுத பூஜை - விடுமுறை
இப்படிப்பட்ட சூழலில் வருகிற அக்டோபர் 19-ம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜையும், அக்டோபர் 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த விடுமுறை நாட்களில் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும்
அதன்படி, வருகிற அக்டோபர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அஜய் யாதவ் பிறப்பித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிடவில்லை.. அதற்குப் பதிலாக இன்னொரு நாளில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படுவதற்கு ஈடாக, நவம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் கடைகள் இயங்காது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குஷி
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு இந்த ஞாயிற்றுக்கிழமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமான விடுமுறை நாள் என்பதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று நினைத்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம்.
அதேபோல், நவம்பர் 21-ம் தேதி ரேஷன் கடைகளுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் அன்றைய தினம் விடுமுறை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டபுள் சர்ப்ரைஸ்?
ஏற்கனவே தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், இரு மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை, முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன..
அதேபோல தீபாவளி பண்டிகையின்போது ரேஷன் கடைகள் வாயிலாக இலவச மளிகை தொகுப்பு வழங்கவும் திட்டமிடப்படுவதாகவும், இதற்காக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து நிதித் துறையிடம் முதல்வர் விஜய் விபரம் கேட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், ஆயுத பூஜைக்காக விடுமுறை நாளிலும் ரேஷன் கடைகள் செயல்படுவதாக அறிவித்துள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
