சுத்துப் போட்டாங்க பரமா! ரவுடித் தனம் பண்றியா? எம்எல்ஏ விஜய் தாமுவை தெறிக்க விட்ட ராயபுரம் மக்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி. விஜய் தாமுவை, தொகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் உரிய முறையில் பதிலளிக்காமல் மக்களை மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுள்ளார் விஜய் தாமு.
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். அதற்கேற்றார் போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சார்பில் மழை நீரை வடிய வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்த நிலையில் ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ விஜய் தாமு தனது தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் ஆய்வுக்காக சென்றுள்ளார்.
அப்போது வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது எனக் கூறி விஜய் தாமுவை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் கேள்விக்கு உரிய பதிலளிக்காமல் விஜய் தாமு ரவுடித்தனம் பண்றியா என மிரட்டும் தொனியில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏ விஜய் தாமு உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த விஜய் தாமு உடனடியாக அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வு நடத்த வந்த எம்எல்ஏ பாதியிலேயே புறப்பட்டு சென்றது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தாமு சர்ச்சையில் சிக்குவது தற்போது மட்டும் நடப்பது அல்ல. ஏற்கனவே பலமுறை இதே போன்ற சர்ச்சைகளை சிக்கிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ சேகர்பாபு பேசும்போது போரடிக்கிறது எனக் கூறி சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்த விஜய் தாமு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
