விஜய் சொன்ன வார்த்தை.. தவெக-வுக்கு பெண்கள் தாறுமாறாக ஓட்டு போட்ட பின்னணி.. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றம் இன்று 2026 மே 4 அன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாகத் தமிழகத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். ஆனால், 2026 தேர்தல் களம் மொத்தமாக மாறிப்போயுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. எந்தக் கருத்துக் கணிப்புகளும் கணிக்காத இந்த அதிரடித் திருப்பத்திற்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது 'பெண்கள் வாக்கு' மட்டுமே.
விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது "பெண்களின் பாதுகாப்பு" என்பதையே தனது பிரதான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தார். "தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் அச்சத்துடன் வளரும் சூழல் நிலவுகிறது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்" என மேடைகளில் அவர் பேசிய உருக்கமான பேச்சுக்கள் தற்போது வேலை செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய் முதலமைச்சரானால் தங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும் எனத் தமிழகப் பெண்கள் உறுதியாக நம்புவதையே இந்த முன்னிலை நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒருவேளை விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், அவர் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், காவல்துறையை சரியாக செயல்பட வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. பெண்களுக்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை பெற்றுத் தரும் வகையில் புதிய சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் குற்றவாளிகளுக்குப் பின்னால் இருந்து அவர்களைக் காப்பாற்றும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். கடுமையான சட்டங்கள், பாரபட்சமற்ற காவல்துறை நடவடிக்கை மற்றும் மன ரீதியான விழிப்புணர்வு மூலம் மட்டுமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றால், பெண்களின் இந்த நீண்ட கால நம்பிக்கையை அவர் எப்படிக் காப்பாற்றப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications