நீ பல லட்ச ரூபாய் பைக் வச்சிருக்க.. சாகசம் காட்டி அடுத்தவனை கெடுக்காத- டிடிஎப் வாசனுக்கு ரவி அட்வைஸ்
சென்னை : யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக்கில் செல்வது பற்றியும், அவரது ரசிகர்களும் அதைப் பின்பற்றுவது குறித்தும் வேதனை தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ரவி அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
யூடியூபரான டிடிஎஃப் வாசன் அதிவேகமாக உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக பைக் ஓட்டி அதை பதிவு செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களும் உள்ளனர்.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக் ஓட்டி அதை யூ டியூபில் டிடிஎஃப் வாசன் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பைக் ஸ்டண்ட்
சமீபகாலமாக இளைஞர்கள் பொது இடங்கள், சாலைகள் என பார்க்கும் இடங்களில் எல்லாம், பைக் ரேஸிலும், ஸ்டன்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது பொதுமக்களுக்கு பல இடைஞ்சல்களையும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், இளைஞர்கள் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

டிடிஎஃப் வாசன்
தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் யூட்யூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். அதிவேக பைக் ரைடு செய்து வீடியோ வெளியிடும் டிடிஎஃப் வாசனுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதேசமயம் அவர் வேகமாக பைக் ஓட்டிச் செல்வது குறித்து புகார்களும் உள்ளன. அவரது ஃபாலோயர்களும், அவரைப் பின்பற்றி அதிவேக பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் உள்ளன.

அலறிய ஜிபி முத்து
இந்நிலையில் சமீபத்தில் மற்றுமொரு பிரபல யூட்யூபரான ஜி.பி.முத்துவை பைக்கில் பின்னால் அமர வைத்து அதிவேகமான ஸ்பீடில் சென்றுள்ளார் வாசன். ஜி.பி.முத்து இந்த பயணத்தில் ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோவை டிடிஎஃப் வாசன் அவரது யூட்யூப் பக்கத்திலேயே பதிவிட்டிருந்த நிலையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் நடமாடும் சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டியது தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ரவி ஐபிஎஸ்
இதேபோல, பலரும் தமிழ்நாட்டில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால், உயிருக்கு உலை வைக்கும் விபத்துகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பைக் ஸ்டண்ட் கலாச்சாரம் பற்றி வேதனை தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ரவி. தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரவி, சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருப்பவர்களுக்கு அறிவுரையும் கொடுத்துள்ளார்.

தவறான வழி காட்டாதீங்க
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறுகையில், "சமூக வலைதளங்களில் நாம் கொடுக்கும் மெசேஜ் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். மோட்டார் பைக்கில் 200 கி.மீ/ மணி வேகத்தில் செல்வது சாசகம். அதனை பொதுவான சாலையில் மேற்கொள்வது சட்ட விரோதமானது. மலையில் இருந்து குதிப்பதி, ஸ்கை டைவிங் செய்வது எல்லாம் உங்கள் ஆர்வமாக இருந்தால் அதை அதற்குரிய இடங்களில் சென்று செய்யலாம். மற்றவர்களுக்கு தவறான வழியைக் காட்டும் வகையில் செயல்படக்கூடாது.

நீங்க வச்சிருக்க பைக்
நீங்கள் வைத்திருக்கும் பைக், சேஃப்டி கியர் போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட பல லட்சம் விலை கொண்ட பாதுகாப்பான பைக்காக இருக்கலாம். அதில் நீங்கள் 250 கி.மீ வேகத்தில் செல்லலாம். இந்த வேகத்தில் சாதாரண மோட்டார் பைக்கில் செல்ல நினைத்தால் என்ன ஆகும்? விபத்து தான் நடக்கும்? நாம் கொடுக்கும் மெசேஜ் மற்றவர்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல் இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம். தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.

பிரபலமாக வேண்டும் என்பதற்காக
நாம் பிரபலமாக வேண்டும், நம் வீடியோ ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. பாசிட்டிவ் மெசேஜ் சொல்பவர்களுக்கு பார்வையாளர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஒரு நல்ல செய்தியையே வித்தியாசமான முறையில் கவனப்படுத்தலாம். தவறான வழிகாட்டல் மூலமாக, மற்றவர்களை பின்தொடர வைத்து பாதிப்பை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அங்க போய் சாகசம் பண்ணுங்க
அவரிடம் பைக் இருக்கிறது என்றால், அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்வதற்குரிய ட்ராக்கில் சென்று ஓட்டலாம். மலை மீது இருந்து கூட குதிக்கட்டும். அதனை பொது வெளியில் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, மற்றவர்களையும் தவறான பாதைக்கு திருப்பது தவறான செயல். பார்வையாளர்களும், இதுபோன்ற வீடியோக்களை பார்க்கலாமே தவிர, அவர்களை பின்தொடரக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.