அறிவிப்பில் மாற்றம்.. இன்று 3 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி.. பாதுகாப்பு பணியில் போலீஸ் தீவிரம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுகிறது.
தமிழகத்தில் அக்.2ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதற்காக, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் பேரணிக்கு அனுமதி வழங்க ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அனுமதி கோரினர்.
ஆனால் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை, பின்னர் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு.. காக்கி பேண்ட், யூனிஃபார்முடன் ரெடியான பாஜக தலைகள்! “ஷாக்”அறிவிப்பால் ஏமாற்றம்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி
பின்னர் தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
பேரணிக்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்துவந்த நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் கூறி, நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

டிஜிடி அறிக்கை
இந்த வழக்கு அக்.31ல் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்குவதாகவும், 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது எனவும், மேலும் 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என்றும் டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் அனுமதி
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்று காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிபந்தனைகள் என்ன?
ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம், விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி நடத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட நபர் அல்லது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக் கூடாது, மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது, இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களையும் பாடக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

3 இடங்களில் பேரணி
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இன்று நடைபெறவிருந்த பேரணியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு பணியில் போலீஸ்
இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மோப்ப நாய் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பெரம்பலூரில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.