ஆரம்பிச்சாச்சு.. சசிகலாவுக்காக.. "முதல் மணி"யை ஓங்கி அடித்த அமைச்சர்.. கோவிலில் ஸ்பெஷல் யாகம் வேறு!
சென்னை: சசிகலாவுக்கான தனது முதல் ஆதரவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார்.. இதன்மூலம் அதிமுக தலைமை கடுகடுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா ஜெயிலில் இருக்கும்போதிருந்தே, அவருக்கு ஆதரவான கருத்துக்களை சொன்ன ஒருசில அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர்.
பல சமயங்களில் இவர் பேசுவதை பார்த்தால் பாஜக அமைச்சர் போலவே தோன்றினாலும், சசிகலாவை விமர்சித்தது இல்லை.. மாறாக "சின்னம்மா நன்றாக இருக்க வேண்டும், நல்லபடியா ஜெயிலில் இருந்து வர வேண்டும், அதற்காக ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்" என்று வெளிப்படையாகவே பேட்டிகளை பலமுறை தந்தவர்.

ஆரூடம்
அதனால்தான், இப்போது சசிகலா வெளியே வந்துள்ள நிலையில், அனைவரின் பார்வையும் ராஜேந்திர பாலாஜியை நோக்கியே பாய்ந்து கொண்டிருக்கிறது.. எப்போது வேண்டுமானாலும் அந்த பக்கம் தாவக்கூடும் என்ற கணிப்புகளையும் அரசியல் நோக்கர்கள் அவ்வப்போது ஆரூடம் சொல்லி கொண்டே இருக்கின்றனர்.

தை அமாவாசை
இதுபோன்ற நேரத்தில்தான் ஒரு செய்தி கசிந்துள்ளது.. கும்பகோணம் கோயிலில் சசிகலா பெயரில் இவர் சிறப்பு பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது... நேற்று தை அமாவாசை என்பதால், கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்றிருக்கிறார். அங்கு "நிகும்பலா" என்ற யாகத்திலும் கலந்து கொண்டு பூஜை செய்துள்ளார்.

யாகம்
இது ஒரு ரகசிய பூஜையாம். கட்சிக்குள் யாருக்குமே தெரியவில்லை. அவரது நிர்வாகிகளுக்கே கொஞ்சம் லேட்டாகத்தான் விஷயம் கசிந்துள்ளது.. அதற்கு பிறகுதான் கோயிலுக்கு சென்றுள்ளனர். பொதுவாக, இந்த கோயில் ரொம்ப விசேஷமானதாம்.. அமாவாசையில் நிகும்பலா என்ற யாகம் அதைவிட சிறப்பு வாய்ந்ததாம்.. எதிரிகளை வீழ்த்தக்கூடிய யாகம் இது.. தொல்லை தீர்வது மட்டுமல்ல, இழந்ததையும் மறுபடியும் பெற்றுவிட வைக்கும் அளவுக்கு சக்தி மிகுந்த யாகம் என்கிறார்கள்.

சிறப்பு
இதே கோயிலுக்கு ஏற்கனவே ஜெயலலிதா, சசிகலா வந்துள்ளனர்.. பலமுறை சிறப்பு பூஜைகளை செய்துவிட்டு போயுள்ளனர்.. ஒருமுறை ஜெயலலிதாவுக்கு பல சிக்கல்கள் கூடியிருந்த சமயம் இங்குதான் வந்தாராம்.. ஸ்பெஷல் யாகம் செய்துவிட்டு போனபிறகுதான், மறுபடியும் முதல்வரானாராம்.

அமைச்சர்கள்
"சசிகலாவால், இன்றைக்கு பல பேர் அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் பதவியில் உள்ளனர்.. இப்போது சசிகலாவுக்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன.. வெளியே வந்துள்ளாரே தவிர, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.. 'சசிகலாவின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள், சசிகலா நினைத்தது எல்லாமே நடக்கவேண்டும், அப்படியே தனக்கும் சீட் கிடைக்க வேண்டும்" என்றுகூட அமைச்சர் நேற்றைய தினம் வேண்டி கொண்டிருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கண்டிப்பு
ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருவது தெரிந்தும், ஏற்கனவே கட்சி தலைமை கண்டித்துள்ளது.. இப்போதும் அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறார்.. இதனால் மீண்டும் கட்சி தலைமையின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி இருக்கும் நிலைமையும் வரலாம் என்கிறார்கள்.

முதல் மணி
ஆனால், சசிகலாவுக்கு ஒருசில அமைச்சர்கள் ஆதரவாக ஆனால் மறைமுகமாக இருக்கிறார்கள், விரைவில் வெளிவருவார்கள் என்று தொடர்ந்து அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது என்ற நிலையில், அதற்கான "முதல் மணி"யை ராஜேந்திர பாலாஜி அடித்திருப்பதாகவே தெரிகிறது.