23 மணி நேர தொடர் பயணம்.. பெங்களூருவில் நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார் சசிகலா!
சென்னை: பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் நேற்றைய தினம் பெங்களூர் பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி புறப்பட்டார்.
அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொடி பயன்படுத்தக் கூடாது என அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மீறினால் தமிழக எல்லையில் கொடி அகற்றப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

பயணம்
இந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி அருகே அவர் வந்த போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி நீக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் தனது பயணத்தை தொடர்ந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் புடைச்சூழ உற்சாக வரவேற்பில் நனைந்தபடி பயணம் செய்தார்.

வழிபாடு
தமிழகத்தில் 57 இடங்களில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேளம், தாரை தப்பட்டை என ஆட்டம் பாட்டத்துடன் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூரில் முத்து மாரியம்மன் கோயில், பிரத்தியங்கரா தேவி கோயில்களுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார்.

வாக்குவாதம்
இதையடுத்து தொண்டர்கள் அன்பில் நீந்தி தனது பயணத்தை தொடர்ந்தார். சென்னை எல்லை வந்தவுடன் திநகர் வரை அவருக்கு 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அருகே குயின்ஸ்லாந்து பகுதியில் சசிகலாவின் கார் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீஸாருடன் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாக்குவாதம் செய்தபின்னர் அவரது வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர் பயணம்
நேற்று காலை தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார். தொடர்ந்து 23 மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். திநகர் வீடு வந்தது வரை அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.