ஸ்கீமா? ஸ்கேமா? பிக் பஜார் மீது “பெரும் மோசடி” புகார்.. புலம்பும் மக்கள் -பிராஃபிட் கிளப்பில் நஷ்டம்
சென்னை: தமிழ்நாடு உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்த பிக் பஜார் கடைகளில் கொண்டு வரப்பட்ட பிராஃபிட் கிளப் திட்டத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கில் இழந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பியூச்சர் குழுமத்துக்கு சொந்தமான பிக் பஜார் விற்பனையகம், தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் பல்வேறு கிளைகளை தொடங்கி நடத்தி வந்தது.
முக்கிய மால்களில் உள்ள பிக் பஜார் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
பிக் பஜாரை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக கூறப்படும் சூழலில், பிக் பஜாரில் கொண்டு வரப்பட்ட பிராஃபிட் கிளப் திட்டத்தில் ரூ.11 ஆயிரம் கொடுத்து சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

யூடியூபர் கலீலுர் ரஹ்மான்
இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரான கலீலுர் ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் விரிவான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "நிறைய நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குறதுன்னா, நானும் மனைவியும் எப்போவாச்சும் பிக் பஜார் போறதுண்டு.. போன வருஷம் அப்படியொரு நாள் லக்ஸ் சினிமாஸ்ல 'புஷ்பா' படம் பார்த்துட்டு, அதே பீனிக்ஸ் மால்ல இருக்குற பிக் பஜார் கடைக்கு போனோம்.

பிராஃபிட் கிளப்
பில் போடுற இடத்துல அந்த கடையோட ஊழியர் ஒருத்தர் எங்களை நோக்கி வந்து "சார்.. பிக் பஜார்ல இப்போ ஒரு திட்டம் போய்ட்டு இருக்கு. அதுக்கு பேரு 'Big Bazaar Profit Club'. நீங்க 11 ஆயிரம் செலுத்தினால், அதுக்கு மேல நீங்க கூடுதலா 2 ஆயிரம் சேர்த்து 13 ஆயிரத்துக்கு ஷாப்பிங் பண்ணலாம். ஒரு வருஷம் வேலிடிட்டி இருக்கும், எந்த பிக் பஜார் கடையில வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்.

நல்ல திட்டமா இருக்கே
நீங்க அடிக்கடி பிக் பஜார் வர்ற ஆளா இருந்தா, உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்'ன்னு சொன்னார். நல்ல திட்டமாக இருந்ததால, நாங்களும் ஓகே சொன்னோம். 11 ஆயிரம் செலுத்தினோம். அப்போவே அந்த கார்டுல ஒரு 2 ஆயிரம் ரூபாய்க்கு பொருளும் வாங்குனோம். 2 மாசம் கழிச்சு, ஒரு தடவை போய் 3 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குனோம்.

அமேசான், ரிலையன்ஸ் போட்டி
ஆனா, சில வாரங்கள்லயே பிக் பஜாரை மொத்தமா அமேசான் நிறுவனம் வாங்கிட்டதா செய்தி வந்தது. அதுக்கப்புறம், பிக் பஜாரை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிட்டதா வேறொரு செய்தியும் வந்தது. அமேசான் vs ரிலையன்ஸ் நடுவுல பெரிய குழப்பம், சண்டை போய்ட்டு இருக்குன்னு நியூஸ்ல படிச்சேன். இதுக்கு நடுவுல, பீனிக்ஸ் மாலில் நாங்க வழக்கமா போற பிக் பஜார் கடையை மூடிட்டாங்க.

பிக் பஜார் மூடல்
என்னங்கடா இதுன்னு கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி கேட்டா 'கவலைப்படாதீங்க சார். இப்போதைக்கு தற்காலிகமாதான் எல்லா பிக் பஜார் கடையை மூடியிருக்கோம். சீக்கிரமே ரிலையன்ஸ் நிறுவனம் மூலமா எல்லா கடையும் திறப்பாங்க. இப்போதைக்கு சென்னையில ஒரேயொரு பிக் பஜார் பாண்டி பஜார்ல இருக்கு, அங்கே வேணா போய் பிராஃபிட் கிளப்பை யூஸ் பண்ணிக்கோங்க'ன்னு சொன்னாங்க.

ரிலையன்ஸ் பஜார்
நாங்களும் மே மாசம் போய் ஒரு 4 ஆயிரம் ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணோம். சமீபத்துல தீபாவளிக்கு அடுத்த வாரம் அந்த கார்டுல இன்னும் 4 ஆயிரம் ரூபாய் இருக்கே, டிசம்பர் வரை வேலிடிட்டி இருக்கேன்னு புதுசா திறந்த ரிலையன்ஸ் பஜாருக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு பில் போட கியூவுல நின்னு அந்த கார்டை நீட்டுனா, என்னமோ நான் அவங்களோட சொத்தை எழுதி கேட்ட மாதிரி எளக்காரமா பார்த்தார்.

கஸ்டமர் கேர்
'இது பிக் பஜார் கார்டு, இதெல்லாம் இங்கே செல்லாது'ன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. செம்ம காண்டானாலும், அவர்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லன்னு வீட்டுக்கு வந்து பிக் பஜார் கஸ்டமர் கேருக்கு கால் அடிச்சேன். இந்தியா முழுக்க ஒரு நம்பர் கூட வேலை செய்யல, மொத்தமா இழுத்து மூடிட்டாங்க. நானும் கடந்த 10 நாளா என்னென்னமோ முயற்சி செய்து பார்த்துட்டேன். ஒண்ணும் வேலைக்கு ஆகல.

திட்டமிட்ட மோசடி?
அப்புறம், பொறுமையா யோசிச்சு பார்த்தா இது ஸ்கீம் இல்ல, திட்டமிட்ட ஸ்கேம்னு (மோசடி) தோணுச்சு. ஏன்னா, ரெண்டு மாசத்துல வேறொரு கம்பெனிக்கு மொத்தமா விக்கப்போற நிலைமையில, யாரும் இப்படியொரு திட்டம் எல்லாம் போட்டுட்டு இருக்கமாட்டாங்க. ஒரு கம்பெனியை விக்குறதுன்னா குறைஞ்சது 6 மாசம், 1 வருஷம் பேச்சுவார்த்தை போகும்.

வாடிக்கையாளர்கள் புலம்பல்
எனவே, தெரிஞ்சே தான் இப்படியொரு வேலையை பார்த்திருக்காங்கன்னு தோணுச்சு.. பிக் பஜார் பியூச்சர் குரூப் நல்லா பண்றீங்க. பிக் பஜார் பியூச்சர் குரூப் பேஸ்புக் பேஜுக்கு போய் பார்த்தா, அங்கே நம்மளை மாதிரி நூற்றுக்கணக்கான கஸ்டமர்ஸ் கமெண்ட்ஸ்ல கதறிட்டு இருக்காங்க.

புகார் எண்
10 ஆயிரத்தை இழந்துட்டேன், 12 ஆயிரத்தை இழந்துட்டேன்னு.. பல பேர் கேட்டுட்டு இருக்காங்க. சில பேர்கிட்ட பிக் பஜார் நிர்வாகம் 8 மாசம் முன்னால ஒரு பெண் நிர்வாகியோட ஈமெயில் ஐடியை கொடுத்து பணத்தை திருப்பி கேட்டு புகாரளிக்க சொல்லியிருக்கு. ஆனா, அந்த அம்மாவும் கம்பெனியை விட்டு அப்போவே போயிருச்சு போல.

நுகர்வோர் நீதிமன்றம்
இப்போ, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.. '4 ஆயிரம்தானே, விடுங்க'ன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார்.. அப்படி சாதாரணமா விட தோணல.. ஒரு காலத்துல, சென்னை வந்த புதுசுல 4 ஆயிரத்தை வெச்சு ஒரு மாசத்தையே ஓட்டியிருக்கேன்.. 4 ஆயிரம்ங்கிறது பெரிய பணம்.. நுகர்வோர் நீதிமன்றம் போனா, பலன் இருக்குமா..?

பலன் கிடைக்குமா?
இல்ல, 4 ஆயிரம் தொலைச்சதுக்கு மேற்கொண்டு 40 ஆயிரம் செலவழிச்சு நேரமும், அலைச்சலும்தான் ஆகுமா? அப்படின்னு யோசனையா இருக்கு.. இதுக்கு நடுவுல, என் சோஷியல் மீடியா நண்பர்கள் வட்டத்துல இந்த 'பிக் பஜார் ப்ராஃபிட் கிளப்' மோசடியில் வேற யாரும் பலி ஆகியிருக்கீங்களான்னும் சொல்லுங்க.

தொடர்பு எல்லைக்கு அப்பால்..
இது தொடர்பாக நாமும் பிக் பஜாரின் கஸ்டமர் கேர் எண்களுக்கு தொடர்புகொண்டு சேவையே நிறுத்தப்பட்டது தெரியவந்தது. ஆனால், பியூச்சர் குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த பிராஃபிட் கிளப் திட்டம் குறித்த விபரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.












Click it and Unblock the Notifications