Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணைக் காட்டிய ஸ்டாலின்.. அதிமுகவுக்கு “குட்பை”.. எஸ்டிபிஐ முடிவுக்கு முக்கிய காரணமான அந்த மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. கடந்த வாரம், அமித் ஷா சென்னை வந்தபோது முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியேறி உள்ளது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

SDPI Quits AIADMK Alliance After Meeting with Stalin During Amit Shah s Chennai Visit

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ விலகல்

வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக உடன் எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டணியை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ட்விஸ்ட் நடந்தது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதால், எஸ்.டி.பி.ஐ கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அதிமுக உடனான கூட்டணி தொடர்பான அறிவிப்பை சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அதே நாளில், நெல்லை முபாரக் தலைமையிலான எஸ்டிபிஐ கட்சியினர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உடன் நடந்த மீட்டிங்

அப்போது, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், வக்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவும் நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு என எஸ்டிபிஐ கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இருவரும் டெல்லியில் சந்திப்பு நடத்தியதுமே எஸ்.டி.பி.ஐ கட்சி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. எஸ்டிபிஐ கட்சியினர் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் தகவல் அறிந்து திமுக தரப்பு அவர்களிடம் பேசியதாகத் தெரிகிறது. அதன் பிறகு தான் அமித் ஷா சென்னை வந்த நாளில் எஸ்டிபிஐ கட்சியினர் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நெல்லை முபாரக் காட்டமான விமர்சனம்

அன்று மாலையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால், மத்திய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள்.

இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அதிமுகவின் இந்தக் கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடா நட்பு

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன. இந்தக் கூட்டணி மூலம், அதிமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது.

தமிழகம் என்பது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு உறுதியாக நிற்கும் மண். பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை. இத்தகைய பாஜகவை, எந்த வழியில் வந்தாலும், யார் மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில் வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

பாஜகவை வெறுக்கிறார்கள்

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது எஸ்டிபிஐ. "அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தங்களை விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது" எனத் தெரிவித்துள்ளார் எஸ்டிபிஐ பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக்.

திமுக கூட்டணியில்

பாஜகவை எதிர்க்கும் கட்சி உடன் கூட்டணி என எஸ்டிபிஐ தெரிவித்திருப்பதன் மூலம், அக்கட்சி திமுக உடன் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த மேலதிக தகவல்கள் வரும் நாட்களில் உறுதிப்படுத்தப்படக்கூடும்.

அதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியும் வெளியேறியுள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமும் திமுக பக்கம் சாய்வது, அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+