அமைச்சர் உதயநிதி போட்ட முதல் கையெழுத்து இதுதான்.. விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி
சென்னை: இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தனது அறையில் அமர்ந்து முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து முதல் கையெழுத்திட்டார். வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலாரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்க உத்தரவிட்டார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , தன் மீதான விமர்சனங்களுக்கு தனது செயல் மூலம் பதிலடி கொடுப்பேன் என்று தெரிவித்ததுடன் , தான் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சராக பதவியேற்ற பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உதயநிதிக்கு புத்தாடைகள், பொன்னாடைகள் போர்த்தி, பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின் . தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்க வந்த அமைச்சர் உதயநிதியை இருக்கையில் அமர வைத்தார் அமைச்சர் துரைமுருகன். மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
இதை தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலாரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்க உத்தரவிட்டார்.
அமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், வாரிசு அரசியல் என்ற என் மீதான விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றபோதும் விமர்சனங்கள் வந்தன. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். அமைச்சரவையில் என் மீதான குறைகள், விமர்சனங்களை முன்வைத்தால் அதை சரிசெய்வேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதனை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையிலும் எனது செயல்பாடுகள் அமையும் என்றும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் 3 கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். அவர் சொன்னது போலவே, விளையாட்டுதுறையில் ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications