"விஜய்யே காங்கிரஸை முடிச்சிடுவார்".. ராகுலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் தராத ஸ்டாலின்.. பின்னணி தெரியுமா?
சென்னை: ராகுல் காந்தி சந்திக்க நேரம் கேட்டும் மு.க.ஸ்டாலின் மறுத்தது ஏன்? இதன் பின்னணியில் நடந்த அரசியல் கணக்குகள் என்ன? சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனை ஸ்டாலின் சந்தித்தபோது, ராகுல் சந்திப்பு விவகாரம் குறித்து பேசியதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பான தகவல் உலாவுகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளுசிவ் தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளது.. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், ராகுல் காந்திக்கு நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்க வேண்டும் என்று துரைமுருகன் சொன்னதாக திமுக தரப்பில் பரபரப்பு செய்தி ஒன்று உலாவுகிறது.
அதாவது, பிரதமர் வேட்பாளராக தன்னை விஜய் முன்னிறுத்தாத விவகாரத்திலும், பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் விஜய் இணையாத விவகாரத்திலும் விஜய் மீது நிறையவே அதிருப்தியடைந்திருந்தார் ராகுல்காந்தி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இதனால், "மாணவர்கள் குரல்" நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வரும்போது ராகுலையும் விஜய்யையும் சந்திக்க வைத்துவிட வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரும் முயற்சியை எடுத்தனர். ஆனால், விஜய்யை சந்திக்க விரும்பாத நிலையில் இருந்தார் ராகுல் காந்தி.
இதற்கு மாறாக, சென்னையில் ஸ்டாலினை சந்திக்க வேண்டும், அதன் மூலம் விஜய்க்கு ஒரு பயத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட ராகுல் காந்தி, கனிமொழி மூலமாக ஸ்டாலினை சந்திக்க நினைக்கும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்..
இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு கனிமொழி கொண்டு சென்றபோது, ஸ்டாலினின் முகம் டக்கென மாறியிருக்கிறது.. காங்கிரசும் ராகுலும், திமுகவுக்கு துரோகம் செய்து விட்ட கோபம் ஸ்டாலினுக்கு நிறையவே இருந்ததால், அதனை கனிமொழியிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.. இதனால் ராகுலை சந்திக்க, ஸ்டாலின் அப்பாயிண்மெண்ட் தரவில்லை.
ராகுல் காந்தி அப்பாயிண்மெண்ட்
இந்த விஷயம் ராகுலுக்கு தெரிவிக்கப்பட்டது.. இதனால் வேறு வழியில்லாமல் இடைத்தேர்தலின் முடிவுகளுக்காக காத்திருந்தார் ராகுல். இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றிப்பெற்றதையடுத்து, விஜய்யை சந்திப்பது தான் சரியானது என திட்டமிட்டு, அவரை சந்திக்கும் விருப்பத்தை ராகுல் தெரிவிக்க, அதன்படியே இருவரின் சந்திப்பும் நடந்து முடிந்தது.
இந்நிலையில்தான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10-ந்தேதி மருத்துவமனையில் அட்மிட்டானார் திமுக மூத்த தலைவர் துரைமுருகன்... மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேறியிருந்த அவரை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின். அப்போது, அரசியல் ரீதியாக சில முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் பேசிக்கொண்டனர். அதில் ராகுல் குறித்தும் பேச்சும் எழுந்துள்ளது.
துரைமுருகன் சொன்னது என்ன
"ராகுல் சென்னைக்கு வந்து விஜய்யை சந்தித்துவிட்டு போயுள்ளார். உங்களை சந்திக்க ராகுல் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டபோது, அவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். உங்களைத் தேடி ராகுல் வரும்போது, அந்த சந்திப்பின் மூலம் விஜய்க்கு ஏதோ சொல்ல விரும்பியுள்ளார் ராகுல். அதை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அரசியலில் சில சந்திப்புகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்த உதவும். உங்களை அவர் சந்தித்திருந்தால், விஜய் மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் குழப்பம் உருவாகியிருக்கவும் வாய்ப்பு உண்டு" என்று சொன்னாராம் துரைமுருகன்.
ஸ்டாலின் தந்த பதில்
அதனைக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், "துரோகிகளை பக்கத்தில் சேர்க்க வேண்டுமா? என நான் நினைத்தேன். இனி அவர்களுடன் எந்த சூழலிலும் ஒட்டுதல் கூடாது. காங்கிரசை விஜய்யே அழிச்சிடுவார். அது நடக்கும்போது காங்கிரஸ் உணரட்டுமென்று தான், அவரை சந்திக்க மறுத்தேன்" என ஸ்டாலின் சொல்ல, அதுவும் சரிதான் என்றாராம் துரைமுருகன்" என்கிறார்கள் திமுக மா.செ.க்கள்.
- நமது சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
