உங்க அப்பாவை மிஸ் பண்றீங்களா? கேள்வி கேட்ட இளம் பெண்... கண் கலங்கிய ஸ்டாலின்
சென்னை: நான் கலைஞரின் மகன் என்று தேர்தல் பிரசார களத்தில் கம்பீரமாக சொல்லுவார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். நான் கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறும் போதே உடன்பிறப்புகளிடம் இருந்து உற்சாக விசில் பறக்கும். உற்சாகத்தோடும், கெத்தோடும் பேசி பிரசாரம் செய்து வரும் ஸ்டாலினை கண் கலங்க வைத்து விட்டார் ஒரு இளம் பெண்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக என அனைத்துக்கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இந்த முறை மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராக அமர வேண்டும் என்று முழு முனைப்போடு பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் பிரம்மாண்ட கூட்டம் கூடுகிறது.

கேள்வி பதில்
தேர்தல் பிரசார பரபரப்பு இடையே மு.க ஸ்டாலினிடம் இளைஞர்களும், இளம் பெண்களும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். அந்த கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஸ்டாலின் செய்வாரா? என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நாளை தினம் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
நீட் தேர்வு எப்படி
நீட் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தமாக இருக்கிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை எப்படி ரத்து செய்வீர்கள். கொரோனா நிவாரணம் ரூ. 4 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறீர்கள், பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்கள் அதை செய்வீர்களா என்று இளைஞர்கள் கேள்வியை முன் வைத்துள்ளனர்.

ஊழலை ஒழிக்க முடியுமா
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறீர்கள். பத்தாண்டு காலமாக நீங்கள் ஆட்சியிலேயே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உங்கள் கட்சியினர் ஊழல் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ஒரு இளைஞர் கேட்க அதற்கு ஸ்டாலின் சொன்ன பதில் மாஸ்டர் பீஸ்.
மாற்றம் வருமா?
நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன வகையான மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா என்று ஒரு இளம் பெண் கேட்க அதற்கு ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தான் செய்யப்போகும் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார் ஸ்டாலின்
கண் கலங்கிய ஸ்டாலின்
உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை பார்ப்பீங்களா? உங்களுடைய அரசியல் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் எது?
என்று பலரும் கேட்க அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ஸ்டாலினை ஒரு கேள்வி கலங்க வைத்து விட்டது. உங்க அப்பாவை மிஸ் பண்றீங்களா? என்று ஒரு இளம் பெண் கேட்ட கேள்வி மு.க ஸ்டாலின் கண்களை குளமாக்கி விட்டது. கண்களின் ஓராத்தில் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டே அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.