3 முறை சம்மன்.. நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை கைது செய்ய உத்தரவு.. மாநில எஸ்சி/ எஸ்டி ஆணையம்
சென்னை: பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தவறிய திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: -
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் சிவந்திபட்டி கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் பிரமானந்தம். பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செல்லும் வழியையே மறித்ததோடு நிலத்தில் மனுதாரரையும் அவரது குடும்பத்தினரையும் போக விடாமலும் பயன்படுத்த விடாமலும், நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணத்தின் மூலமாக பெயர் மாற்றம் செய்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளருக்கு கடந்த 10.06.2022 அன்று ஒரு அறிவிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிவிக்கையை பொருபடுத்தாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதை தெரியப்படுத்தும் அறிவிக்கையில் அறிவிக்கைக்கு பதில் தராவிட்டால் விளைவு என்ன என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த அறிவிக்கையை பெற்றுக் கொண்ட பின்னரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையத்தின் அறிவிக்கையை பொருட்படுத்தாமல் அறிக்கை அனுப்புவதை வேண்டும் என்றே தவிர்த்தார். இதன் காரணமாக 27.10.2022 அன்று சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த சம்மனை எபெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையத்தின் சம்மனில் குறிப்பிட்ட படி ஆஜராக தவறிவிட்டார். அப்போதே அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்றாலும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி 30.11.2022 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவ்வாறு ஆஜராகும் போது ஆணையத்தின் அழைப்புகளை அலட்சியப்படுத்தியதற்காக ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பழங்குடியினர் ஆணைய சட்டம் 2021 பிரிவு 9- இன் படி ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணம் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கபப்[ட்டு இருந்தது.
மேலே குறிப்பிட்ட சம்மன்களுக்கு பின்னரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மெற்சொன்ன காரணம் கேட்கும் அறிவிப்புக்கு பதில் கொடுக்கவோ சம்மனில் கட்டளையிட்டது போல நேரில் ஆஜராகவோ தவறியிருக்கிறார். தனக்கு பதிலாக 30.11.2022- அன்று ஆஜராக மாரிராஜன் என்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரை ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரின் இத்தகைய செயல் ஆணையத்தின் உத்தரவுகள் தன்னை கட்டுப்படுத்தாது என்ற அவரது கருத்தினை வெளிப்படுத்துவதாகவும் ஆணையத்தின் நேரில் ஆஜராவதை தம்முடைய தகுதிக்கு குறைவானது என்று அவர் கருதுவதாகவும் அமைகிறது.
எனவே தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம் 2021 பிரிவு 9- இன் படி திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ. 500 அபராதம் விதித்து இந்த ஆணையம் உத்தரவிடுகிறது. இத்துடன் மேற்சொன்ன திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கைது செய்து இந்த ஆணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று ஆஜர்படுத்துமாறு, பிணையில் விடக்கூடிய பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. பிடி ஆணைய நிறைவேற்றும் பொருட்டு தென்மண்டல காவல்துறைக்கு அனுப்ப உத்தரவிடபப்டுகிறது. அபராத தொகையை விதிமுறைகளை கடைபிடித்து வச்சூல் செய்ய உத்தரவுநகல் ஒன்றினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கவும் உத்த்ரவிடப்படுகிறது.