“சுப்பக்காவா?” சீமானுக்கு என்ன திடீர் பாசம்! திமுகவில் குழப்பம் ஏற்படுத்த “நப்பாசை” - சுப.வீ. சுளீர்
சென்னை: சுப்புலட்சுமி ஜெகதீசன் மீது சீமானுக்கு திடீர் பாசம் வரக்காரணம் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டு கலங்கிய குட்டையில் அவர் மீன்பிடிக்க நினைப்பதால்தான் என திரவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், சென்ற மாதம் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
தன் உடல் நலம், வயது ஆகியனவற்றின் காரணமாகத் தான் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்றும், உறுப்பினராகத் தொடர்வேன் என்றும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வாரிசு அரசியலால் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்! சீனியரும் செம அப்செட்- கோர்த்துவிடும் ஜெயக்குமார்!

சுப்பக்கா
திமுகவில் ஏதேனும் சலசலப்பு வராதா, கலங்கிய குட்டையில் தான் ஏதேனும் மீன்பிடிக்க முடியாதா என்று காத்திருந்த சீமான் இப்போது ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பினர் சுப்பக்கா என்று அன்பாக அழைத்ததன் பொருள் இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறதாம்.

சீமான் அறிக்கை
அப்படியே பாசம் பொங்கி எழ ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். "நீங்கள் வெளியில் வந்ததால் திமுகவிற்குத்தான் நட்டம். திமுக கைவிட்டாலும், உங்களை உங்கள் மகனாகிய நான் எப்போதும் கைவிட மாட்டேன். உங்களுக்குத் துணை இருப்பேன்" என்று கண்ணீர் மல்கக் கதறி அழுதிருக்கிறார். அடடா, எவ்வளவு பாசம்! இந்த மகன் இவ்வளவு நாள் எங்கிருந்தார்?

சீமானின் நப்பாசை
புலிகள் சுப்பக்காவின் மீது வைத்திருந்த பாசம் இவ்வளவு நாள் இவருக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? எல்லாம் வேடம்!
திமுகவிற்குள் ஏதேனும் குழப்பம் விளைவித்தால் எஜமானர்களின் பாராட்டைப் பெற்றுவிடலாம் என்கிற நப்பாசை! சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் புலிகளை ஆதரித்து, அதனால் தடா சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தவுடன், நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளித்தது திமுகழகம்தான்.

சீமான் உடல்நலம்
புலிகளை ஆதரித்தார் என்பதற்காக அவரைத் திமுக புறம் தள்ளவில்லை. இப்போதும் அவருக்கு ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்குமானால், அதை அவர் கட்சித் தலைமையோடு பேசிச் சரி செய்து கொள்வார். சீமான் அவருக்காக மிகவும் கவலைப்பட்டுத் தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.