பிரச்னை இருந்தா இப்படி பண்ணுங்க.. “கொள்கையை மீறக்கூடாது”.. பாஜகவினருக்கு மேலே இருந்து வந்த வார்னிங்!
சென்னை : பாஜகவின் கொள்கையில் இருந்து விலகும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டிற்கான பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா, மற்றொரு பாஜக நிர்வாகி டெய்சி சரணை கடுமையாக கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போல ஒரு ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவிற்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்தார்.
முன்னதாக, பாஜகவினரே தன்னை ட்விட்டரில் கடுமையாக சீண்டி வருவது பற்றி காயத்ரி ரகுராம் பொங்கிய நிலையில், அவரது தொடர்ச்சியான பாஜக தொடர்பான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரை 6 மாதங்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

ஆபாச ஆடியோ
பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான கடுமையான வார்த்தை மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்ததற்கு எதிராக டெய்சி சரணிடம் திருச்சி சூர்யா கோபமாக மிகக் கடுமையான ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதாக அந்த ஆடியோ அமைந்துள்ளது.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
இந்த ஆடியோ தொடர்பாக வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் பாஜக காயத்ரி ட்விட்டரில் விமர்சித்தார். பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

6 மாதம் சஸ்பெண்ட்
இந்த நிலையில், காயத்ரி ரகுராமை 6 மாதம் சஸ்பெண்ட் செய்தும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தரவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.

கட்சியினருக்கு அறிவுரை
இதேபோல, அண்ணாமலை இன்னொரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். பாஜகவின் மாநில பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அதிமுக கூட்டணி பற்றியும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து பாஜகவினர் யூடியூப் சேனல்களில் நேர்காணல் கொடுப்பதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளார் அண்ணாமலை. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் கட்சியின் மாநில ஊடகப் பிரிவின் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் தமிழகத்திற்கான பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி தமிழக பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கண்ணியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக, அனைத்து பாஜக நிர்வாகிகள், மற்ற தலைவர்கள் ஆகியோர் ஊடகங்களில் பேசும்போதோ சமூக ஊடகங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடும்போதோ கட்சி கொள்கையை பின்பற்ற வேண்டும்.

உள் விவகாரங்கள் இருந்தால்
உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அதை மாநிலத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களைப் பிரச்சாரம் செய்து, மக்களுடன் ஆழமான மற்றும் நேரடியான ஈடுபாட்டைக் கொண்டிருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

பரபரப்பு
அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுவாக மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கவும், குறிப்பாக ஆளும் திமுக அரசின் தவறான ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல்களை கேள்விக்கு உட்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். பாஜகவில் அடுத்தடுத்து நடந்த சில பிரச்சனைகளால் தமிழக பாஜகவினருக்கு மேலிடத்தில் இருந்தே எச்சரிக்கை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications