“லா பாயிண்டை” பிடித்த ஓபிஎஸ் கேங்.. தீர்ப்பை கவனிச்சீங்களா?அவங்களுக்குதான் சாதகமா இருக்காம் -எப்படி?
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முக்கிய பாயிண்டை சுட்டிக்காட்டிய வைத்திலிங்கம் இது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று தெரிவித்து இருக்கிறார். எதன் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறினார் என்று பார்ப்போம்.
கடந்த ஆண்டு மே மாதம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்தது. எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்கும் நோக்கில் ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்ட அனுமதியளித்தாலும், அதில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்தது.

ஜூலை 11 பொதுக்குழு
இதனை தொடர்ந்து கூடிய பொதுக்குழுவில் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பின் அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அப்போது அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மோதல் வெடித்தது.

மாறி மாறி தீர்ப்பு
இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இப்படி இரு தரப்பினும் மாறி மாறி நடத்திய சட்டப்போராட்டத்திற்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிட்ட உச்சநீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சியடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.

எங்களுக்கு சாதகம்
அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டதாக கூறி வரும் நிலையில்தான், தீர்ப்பில் இடம்பெற்ற முக்கிய கருத்தை மேற்கோள் காட்டி உள்ளார் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று கூறி இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை தெரிவித்துள்ளார்.

சிவில் கோர்டில் வழக்கு
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, "சென்னை ஐகோர்ட் நீதியரசர்கள் சொன்னதை போன்று உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டியது செல்லும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் சிவில் கோர்டில் இருக்கும் வழக்கை எங்களுடைய கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

பொதுக்குழு தீர்மானம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். முழு தீர்ப்பையும் பார்த்துவிட்டு பேசுவோம். சிவில் கோர்டை எங்கள் கருத்து கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றால் இது எங்களுக்கு சாதகமான தீர்ப்புதான்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

என்ன நடக்கும்?
அதாவது உச்சநீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்த பொதுக்குழுவில்தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது, ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது, ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்பது ரத்து போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்காததுடன் சிவில் கோர்டை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்று தெரிவித்ததன் மூலம் அதில் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த முடியும்.












Click it and Unblock the Notifications