சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சப்பாணின்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சிரு.. நான் கரையேறிட்டேன்.. நீங்க".. பாரதிராஜாவின் புதிய வேதம்

பாரதிராஜாவுக்கு இன்று 78வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டுடியோக்களில் இருந்து வயற்காட்டிற்கு, தமிழ் சினிமாவின் தரத்தை கொண்டு சென்றதுடன், அதை கம்பீரமாக நிமிர வைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.. இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது..!

65-களுக்கு பிறகு குறிப்பாக 70-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் ஒருவித தொய்வு ஏற்பட்டது.. அப்போதுதான், பாரதிராஜா என்ற புதுமை இயக்குனர் காலடி எடுத்து வைத்தார்... பல நாள் பசித்து கிடந்தவனுக்கு பால் சாதம் கிடைத்ததுபோல இருந்தது இவரது வருகை!

ஹீரோ என்றாலே, கன கச்சித உடல், அழகு முகம், பளபள நிறம், 50 பேரை அடித்து உதைக்கும் கட்டுமஸ்தான உடல் போன்ற இயல்பான மாயைகளை சுக்குநூறாக நொறுக்கியவர் பாரதிராஜா... பாரதிராஜாவின் படங்களில் மிக முக்கியமாக 4 படங்களை குறிப்பிட்டு பேசலாம்..

 16 வயதினிலே

16 வயதினிலே

"பராசக்தி"-க்கு பிறகு, கிட்டத்தட்ட தமிழ் சினிமா வரலாற்றில் "16 வயதினிலே" இன்றுவரை நம்பர் ஒன் இடத்தை பிடித்து கொண்டுள்ளதே அதற்கு சாட்சி... ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த படம் இது.... மண் வாசனையை ரசிகர்கள் நுகர்ந்த முதல் படம்... ஒரு சினிமா என்றாலே இப்படி எல்லாம்தான் இருக்கும் என்னும் ஃபார்முலாக்களை சுக்குநூறாக நொறுக்கிய காட்டிய படம்.. டைரக்டராக வரவேண்டும் என்ற கனவுடன் 'மயிலு' என்ற பெயரில் கதை எழுதி... சினிமாவில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா, ஸ்ரீதேவியை இதில் மயிலுவாகவே நடமாடவிட்டார்.

வாழ்க்கை

வாழ்க்கை

மழலைத்தனமான ஒரு பெண், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பக்குவத்துடன் எப்படி கையாள்கிறாள் என்பதில், மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும்... மயிலுவை 'மைல்'... 'மைல்' என்றழைத்த அந்த டாக்டரின் தமிழ் உச்சரிப்பும், இளையராஜாவின் கிராமிய இசை ஆளுமையும்... அச்சு அசலாக கிராமிய வாழ்வியலை நம் கண்முன்விரிய செய்தது.

 முதல் மரியாதை

முதல் மரியாதை

கிட்டத்தட்ட இதே அளவுக்கான வெற்றியை "முதல் மரியாதை" படம் தக்க வைத்தது.. 50 வயது நிலப்பிரபுவுக்கும், எளிய பெண்ணுக்கும் நடுவே இருக்கும் பாசம் - பரிவு - தியாகம் - அர்ப்பணிப்பை ஆழமாக வெளிப்படுத்திய படம்.. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு காதல் கதை வந்ததில்லை. ரொம்பவும் சிக்கலான கதை இது.. கிட்டத்தட்ட கம்பி மேல் நடப்பது போலதான்... ஆனால், இதை நாசூக்காக, நயமாக கையாண்டு, கண்ணியத்துடன், நாகரீக காதலாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் பாரதிராஜா.

 ஈர்ப்பு - பாசம்

ஈர்ப்பு - பாசம்

50 வயது நபருக்கு 20 வயசு பெண்ணின் காதலை ஏற்கவும் முடியவில்லை.. நிராகரிக்கவும் முடியவில்லை.. தன் சந்தோஷத்துக்காக அந்த பெண்ணை பயன்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை. இதயத்தில் வைத்து நேசிக்கப்பட்டதால்தானோ என்னவோ, அந்த இரு உடல்களும் கடைசிவரை களங்கப்படவில்லை.. இவர்களிடையேயான உறவு ... பாசமா ... ஈர்ப்பா .. ஈடுபாடா ... என இப்போது வரை சொல்ல தெரியவில்லை.

 வேதம் புதிது

வேதம் புதிது

இதற்கடுத்தபடியாக, "வேதம் புதிது".. பிறப்பிலேயே குலமாகவும், கோத்திரமாகவும், ஜாதியாகவும், மதமாகவும் பிரித்துவிடுகிற வர்ணாசிரம அநியாயத்தை, வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கிய எறிய முயன்ற படம்... பிராமண சிறுவனை மறவன் வீட்டில் வளர செய்து சாதி பாகுபாட்டினை அடியாழம்வரை சென்று உலுக்கிய படம் இது.

 மனித நேயம்

மனித நேயம்

அடுத்து குறிப்பிட்டு சொல்லும்படியான "பசும்பொன்".. பெண்களின் மறுமணத்தை வலுவாக வற்புறுத்திய படம்.. கருத்து தீதியாக தரமாகவும், முற்போக்காகவும், மனித நேயத்தோடும் சித்தரித்த படம்.. அதாவது, பால்ய திருமணம் நடந்து, கணவனும் இறந்துபோனதால், மீதிநாள் முழுக்க விதவையாகவே வாழ வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த சமுதாயத்தில், ஒரு குழந்தைக்கு தாயுமாகி, விதவையுமான பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கும் நவீனத்தை பாரதிராஜா இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்த விதம் புதுமையின் உச்சம்.

 கிழக்கு சீமையிலே

கிழக்கு சீமையிலே

இந்த படங்களுடன் என் உயிர்தோழன், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள், மண் வாசனை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை என ஒவ்வொரு படங்களிலுமே சிலாகித்து போகும் அளவுக்கு அற்புதங்களை குவித்து வைத்துள்ளார் இயக்குனர் இமயம்.

 ஆன்ம ஓலம்

ஆன்ம ஓலம்

அதனாலதான் யதார்த்த மனிதர்களின் ஆன்ம ஓலத்தை அப்படியே படம்பிடிக்கும் காலக்கண்ணாடியாக பாரதிராஜாவின் படங்கள் எப்போதும் பிரதிபலித்து கொண்டே இருக்கின்றன.. அதேசமயம் இளையராஜா என்ற பிரமாண்டத்தை தவிர்த்து விட்டு பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களை ஏனோ பிரித்து பார்க்கவும் முடியவில்லை.. இவர்கள் 2 பேரும் சேர மாட்டார்களா? என்ற ஏக்க பெருமூச்சு கோடம்பாக்கத்தில் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..!

 வேண்டுகோள்

வேண்டுகோள்

"பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும்" என்று, கடந்த வருடம் கவிப்பேரரசு வைரமுத்து, ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.. அந்த வேண்டுகோளை தமிழகமே முன்வைக்கும் வேண்டுகோளாக இப்போதும் முன்மொழிய வேண்டி உள்ளது..

 வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்


இந்த அரிவாளின் அழகியலுக்கு, சரளைகளின் சரளி வரிசைக்கு, கலையாத கலைசெய்த பாரதிராஜாவுக்கு பால்கே விருது, என்பது தவிர்க்க முடியாதது.. காலம் நமக்கு வழங்கிய அற்புத கலைஞர் பாரதிராஜா.. அதிசயங்களே அதிசயித்து பார்க்கும் இந்த அற்புத கலைஞர் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆழ்மனசு எண்ணமும்..!

English summary
Tamil Film Veteran Director Bharathirajas birthday today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X