பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ. ராசா மனு - அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: திமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நட்சத்திர பேச்சாளரும், திமுக எம்பியுமான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் செய்த போது முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆ.ராசாவின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து ம்ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆ. ராசாவின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தற்போதைய நிலையில் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளதாகவும், அதை எதிர்த்து தொடரவுள்ள வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.