அலர்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் '2000' தாண்டிய கொரோனா.. சென்னையில் '800' ப்ளஸ்
சென்னை: தமிழகத்தில் நேற்று 2,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று கொரோனா பாதிப்பு 2,194 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,79,473 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 833 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,618 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் அச்சம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதை மக்கள் முற்றிலும் மறந்த காரணத்தால் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற அச்சமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

சிகிச்சை பெறுபவர்கள்
ஏனெனில் இன்று ஒரே நாளில் 2,194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,79,473 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,270 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,53,733 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 12,157 இல் இருந்து 13,070 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 4 பேர்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,670 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4 பேரும், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும், திருவள்ளூரில் 2 பேரும் மரணமடைந்தனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை
தமிழகத்தில் இன்று 84,927 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,25,554 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 85,350 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,93,47,797 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கலக்கத்தில் செங்கல்பட்டு
தமிழத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 188 பேருக்கும், கோவையில் 180 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 117 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும், கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.