தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்.. 4 ஆணையர்களையும் நியமித்தது தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் எஸ். நடராஜனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், 4 மாநில தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் (Tamilnadu State Information Commission) என்பது, பொதுமக்களுக்கு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தருவதற்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் எழும் புகார்களை விசாரிப்பதற்கும் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) 2005 ஜூன் 15-ம் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2005 அக்டோபர் 12-ம் தேதி முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 2005 அக்டோபர் 7 ஆம் தேதி அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு தகவல் ஆணையத்தை உருவாக்கியது.
தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்த எம்.டி. ஷகீல் அக்தரின் கடந்த ஜூன் 15 ஆம் தேதி பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு, தற்போது புதிய தலைமை தகவல் ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் தமிழக தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் எஸ். நடராஜன், தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில தகவல் ஆணையர்களாக எஸ். மகாலட்சுமி, டி.கே. ஷபீர், சி.பி. மீனா மற்றும் பி. மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் நாள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவே பதவிக்காலமாகும். இதற்கான அரசாணையை மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
