நவ.13 ஆம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அவர்கள் வரும்போது கேக் வழங்க வேண்டும் - பறந்தது ஆர்டர்!
சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 61 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது. நவ.13 ஆம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அவர்கள் அடுத்து பள்ளிக்கு வரும் நாளில் கேக் வழங்க வேண்டும் என உத்தரவு பறந்துள்ளது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பயனாளிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்க தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்
இதற்காக மாநில அரசு சார்பில் 9.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எவ்விதப் புகாருமின்றி செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் இணைந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளனர்.
இத்திட்டத்தின்படி, மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ் அல்லது விங்கீஸ் தயாரிப்பில் 25 கிராம் எடையுள்ள 2 மினி சுவிஸ் ரோல் பாக்கெட்டுகளும், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ஐடிசி தயாரிப்பில் 21.6 கிராம் எடையுள்ள 2 மினி கேக் பாக்கெட்டுகளும், ஏனைய பிற மாவட்டங்களில் ட்ரீம் கேக்ஸ் அல்லது விங்கீஸ், பிரிட்டானியா அல்லது எலைட் தயாரிப்பிலான 45 கிராம் எடையுள்ள ஒரு கேக் பாக்கெட்டும் விநியோகிக்கப்பட வேண்டும்.
இதற்கான தயாரிப்புப் பணிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் 38 மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் விற்பனையாளர்களால் கேக்குகள் ஒப்படைக்கப்பட வேண்டும். அதே நாளில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக வாழ்த்து அட்டைகள் முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து சேரும்.
தொடர்ந்து நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு கேக்குகளும், முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து வாழ்த்து அட்டைகளும் கொண்டு செல்லப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். மாவட்ட அளவில் பணிகளை ஒருங்கிணைக்க முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் TNCSC மண்டல மேலாளர் ஆகியோர் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேக்குகளை பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் விதிமுறைகள்
உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து நவம்பர் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, விநியோக அட்டவணை மற்றும் வழித்தடத் திட்டத்தை இறுதி செய்ய வேண்டும்.
விநியோகத்தை கண்காணிக்க உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் தலைமையிலும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. தொலைதூர, மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதி குறைவான பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாகனங்களை இயக்கவும், எதிர்பாராத சூழல்களுக்காக 1 சதவீத கூடுதல் இருப்பு பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிடங்குகளில் கேக்குகளை இறக்குவதற்கு முன்பாகவே இடத்தைச் சுத்தப்படுத்தி, பூச்சிக் கட்டுப்பாடு செய்து, தரைமட்டத்தில் படாதவாறு பலகைகளின் மேல் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொரு கேக் பாக்கெட்டிலும் 'விற்பனைக்கு அல்ல' (Not for sale) மற்றும் 'MRP அச்சிடப்படாதது' என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பெறப்படும் கேக்குகளை, விநியோகிக்கும் வரை சுத்தமான, குளிர்ச்சியான மற்றும் பூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கான ஏற்பாடுகள்
உணவு ஒவ்வாமை அல்லது மருத்துவக் கட்டுப்பாடுகள் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னரே கேக்குகளைப் பெற வேண்டும்.
கேக் உறைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
நவம்பர் 13 அன்று பள்ளிக்கு வருகை தராத மாணவர்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருந்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் நாளில் வழங்க வேண்டும்.
கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் பெற்றதற்கான ஒப்புதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றுகளை மாவட்ட அளவில் சேகரித்து பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
நவம்பர் 13 அன்று, கேக் விநியோகம் செய்யும் நாளில், எந்தவொரு மாணவரும் விடுபடாமல், கேக்குகளின் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வெற்றிகரமாக அனைத்து கேக்குகளும் விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
