ஏ.கே.ராஜன் அறிக்கை காமாலைகண்ணுடன் தயாரிக்கப்பட்டது.. குறைசொன்ன ஆளுநர்! அப்படியே போட்டுடைத்த அப்பாவு!
காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரிய உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வு முறையை விலக்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை, 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இம்மசோதா நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வலியுறுத்தினார். அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி வலியுறுத்தியது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பிக்கள் குழு சந்திக்க முடியாமல் போனது சர்ச்சையானது.
கடந்த 3ஆம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதமும் எழுந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் மீண்டும் சட்டசபையை கூட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று கூடியுள்ளது. இன்று காலை சட்டசபை சிறப்புக் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. நீட் விலக்கு மசோதவை திருப்பி அனுப்பியது குறித்த காரணங்களை ஆளுநர் ஆர்.என். ரவி எழுதியுள்ளார். அந்த கடிதத்ததை சட்டசபையில் சபாநாயகர் வாசித்தார்.
நீட் தேர்வு முறையாதுதான் என ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். சபாநயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என உணர வேண்டும் என சபாநாயகர் கேள்வி எழுப்பினர்.
உயிரியல் , வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை நியாயப்படுத்தும் காரணங்களை அடுக்கி இருக்கிறார் ஆளுநர் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரிய உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
அரசியல் சாசனப் பிரிவு 200-ன் கீழான அதிகாரத்தின் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். சட்டசபையில் ஆளுநரைப் பற்றி தனியாக விமர்சனம் செய்யக்கூடாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications