சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு ‘மேஜர்’ அறிவிப்பு.. நாளை முதல் 4 இடங்களில் சிறப்பு பேருந்துகள்!
சென்னை : நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயிலின் நடையை திறந்து வைத்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு பேருந்துகள்
இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து, பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

சிறப்பான ஏற்பாடுகள்
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வசதிகள்
மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official app செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications