28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: 27 மாவட்டங்களில் 28-ம் தேதி காலை காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கேற்ப கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

23 மாவட்டங்களில் பேருந்து சேவை
அந்த வகையில் வகை இரண்டில் வகைப்படுத்தப்பட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 மாவட்டங்களில் 28-ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ஊர்கள்
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க இருக்கின்றன.

மாஸ்க் கட்டாயம்
இந்த மாவட்டங்களுக்குள்ளும், இந்த மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கலாம். 50% பயணிகளுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்க வேண்டும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. மாஸ்க் அணியாத பயணிகளை பேருந்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகள்
27 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைக்கு அனுமதி தரப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயங்கும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்துகள் இயங்கும் என்று தெரிகிறது. அரசு விரைவு பேருந்துகள் இயங்கும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications