"அவர்கிட்டயே போய் கேளுங்க".. நயினார் நாகேந்திரன் பற்றிய கேள்விக்கு கடுகடுத்த தமிழிசை!
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, இதற்கு கருத்து சொல்ல நான் தகுதியானவள் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், நயினார் நாகேந்திரன் பற்றிய கேள்விக்கு, அவரிடமே போய் கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் அளித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணியை சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் நயினார் நாகேந்திரன் சிறப்பான முறையில் வழிநடத்தவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு தகுதியானவள் இல்லை என்று கூறினார் தமிழிசை.

அதேபோல, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையிலான மோதல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது அவர்கள் உட்கட்சி விவகாரம் இதிலும் கருத்து சொல்வதற்கு நான் தகுதியானவள் இல்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பான கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவரிடமே போய் கேட்டுக் கொள்ளுங்கள்.. ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கடுகடுப்போடு தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "செல்வப்பெருந்தகை காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலுக்குள் இருந்து கொண்டு எங்கள் கூட்டணியை மூழ்கும் கப்பல் என்று கூறுகிறாரா? முதலில் அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறாரா என்பதை விளக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பாரா என்பதை சந்தேகம்தான்.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி அப்படியான சூழ்நிலையில் தான் உள்ளது. எனவே, செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்யும் அளவுக்கு அதிமுக பாஜக கூட்டணி பலவீனமாக இல்லை. அகில இந்திய அளவில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது. எதிர்க்கட்சியாக வர முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த நிலையில் இருந்து கொண்டு, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து மூழ்கும் கப்பல் என்று செல்வப்பெருந்தகை கூறுவது வேடிக்கையாக உள்ளது." என்றார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜிக்கு பாஜவில் பதவி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், "தமிழக பாஜவில் 25 பிரிவுகளில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த பொறுப்பில் அவர் இல்லையே. ஏற்கனவே அவர் அரசியல் அனுபவம் பெற்றதால் 23 பிரிவுகளில் ஒரு பிரிவின் நிர்வாகியாக இருக்கிறார். அணிகளின் பிரிவுகளில் தொண்டரோடு தொண்டராக பணியாற்றப் போகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications