சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”வடக்கு, தெற்கு, மேற்கு” தமிழ்நாட்டை 3ஆக பிரித்து பகிரப்படும் மேப் -சாதி அடிப்படையில் துண்டாட சதியா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 50 மாநிலங்கள் உருவாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டை மூன்றாகவும், மற்ற மாநிலங்களை பல துண்டுகளாக பிரித்து வடிவமைக்கப்பட்டுள்ள மேப் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் பெகலாவியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில அமைச்சர் உமேஷ் கட்டி, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட உள்ளது என்று கூறினார்.

மகாராஷ்டிரா 3 மாநிலங்களாகவும், கர்நாடகா 2 மாநிலங்களாகவும், உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை பிரிக்க கோரிக்கை

தமிழ்நாட்டை பிரிக்க கோரிக்கை

அமைச்சரின் இந்த கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கிடையே இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் புதிய மேப் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 மூன்றாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு

மூன்றாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு

"இந்தியா 2040: 50 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் அந்த மேப்பில் மேற்கு தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் உள்ளன.

தெற்கு, மேற்கு தமிழ்நாடு

தெற்கு, மேற்கு தமிழ்நாடு

தென் தமிழ்நாட்டை பொறுத்தவரை புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மேற்கு தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

ராமதாஸ் கோரிக்கை

ராமதாஸ் கோரிக்கை

இந்த கோரிக்கையை பாமக உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாகவே எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாமக தலைவர் ராமதாஸ் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டும் முன்வைத்திருந்தார். சென்னை, கோவைக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டங்களை மூன்றாக பிரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

தென் தமிழ்நாடு கோரிக்கை

தென் தமிழ்நாடு கோரிக்கை

குறிப்பாக 70 களின் பிற்பகுதியிலேயே வட தமிழ்நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், 1976 ஆம் ஆண்டிலேயே திட்டக்குடியில் ஒரு மாநாட்டை நடத்தி வன்னியர் மாநிலம், அல்லது வட தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோரினார். இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த சேதுராமன் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழ்நாடு என்ற தனி மாநில கோரிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

கொங்குநாடு கோரிக்கை

கொங்குநாடு கோரிக்கை

கொங்குநாடு முன்னேற்றக்கழகம் என்ற கட்சி கோவையை தலையிடமாகக் கொண்டு மேற்கு தமிழ்நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் கோரிக்கையை முன்வைத்தே உருவாக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்றவுடன் ஒன்றிய அரசு என்று கூறி வந்ததால் கொங்கு நாடு மாநிலமாகப்போகிறது என்ற தகவல் வெகுவாக பரவியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டை கொங்குநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு என ஐந்தாக பிரித்தும் ஒரு மேப் அப்போது பரப்பப்பட்டது.

 சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியா?

சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியா?

மாநில மறுசீரமைப்பு என்பது மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய தமிழ்நாடு உருவானது. ஆனால், அதை மூன்றாக பிரிக்க சொல்வது பகுதி அடிப்படையில் என்று நினைப்பதை விட சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழ்நாடு மூன்று மாநில கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகள், அமைப்புகள் யாவும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை பின்புலமாக கொண்டவை.

தமிழ்நாடு என்னும் சமத்துவ பூமி

தமிழ்நாடு என்னும் சமத்துவ பூமி

வட மாநிலங்களில் சாதி, மத அடிப்படையில் மக்களின் வாக்குகளை திரட்டி தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கின்றன. ஆனால், சமத்துவ பூமியான தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை ஆதரிக்கும் சக்திகள் இதுவரை ஆட்சியை கைப்பற்றியது கிடையாது. சமூக நீதியை கொள்கையாக கொண்ட பெரியார், அண்ணா வழிவந்த திமுகவும் அதிமுகவுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர்.

சாதி ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் அபாயம்

சாதி ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் அபாயம்

எனவே 3 மாநிலங்களாக பிரித்துவிட்டால், அந்தந்த மண்டலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியலில் ஆதாயம் அடையலாம் என்று நினைப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம், அந்தந்த பகுதிகளில் சிறுபான்மை சமூகமாக வசித்து வருபவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அரசியல் பலம் இழந்து அவர்கள் மீதான சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அதிகரிக்க காரணமாகிவிடும் என்ற அச்சம் எழாமல் இல்லை. எனவே சாதி, மத ரீதியில் பிரிந்துவிடாமல் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து சதிகளை முறியடித்து சரித்திரம் படைப்போம்.

English summary
Tamilnadu 3 state seperation case - Is this seperation in based on : இந்தியாவில் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 50 மாநிலங்கள் உருவாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டை மூன்றாகவும், மற்ற மாநிலங்களை பல துண்டுகளாக பிரித்து வடிவமைக்கப்பட்டுள்ள மேப் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X