ஈழத் தமிழர் பிரச்சனை- அடுத்த அதிரடியை காட்டும் முதல்வர் ஸ்டாலின்! பிரஸ் மீட்டில் ஓபனாக சொன்ன வைகோ!
சென்னை: தமிழீழ தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் விவரித்தார் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை வைகோ, விசிக தலைவரும் லோக்சபா எம்பியுமான தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.

ஸ்டாலினின் மனிதநேயம்
இச்சந்திப்புக்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியான சூழலில் அரசியலில் பொருளாதாரத்தில் இலங்கைத் தீவில் சிங்களரும் சேர்ந்து கலவரம் நடத்திக் கொண்டுள்ள இந்த சூழலில் ஈழத் தமிழருக்கு, மலையகத் தமிழருக்கு, பூர்வீகத் தமிழருக்கு அங்கே வாழும் தமிழருக்கு தமிழ்நாட்டிலே இருந்து அவர்கள் கண்ணீரை துடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், மனித நேய நோக்கத்துடன் முடிவெடுத்து உடனடியாக அவர்களை பசி பட்டினியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்.

உதவி பொருட்கள்
ரூ134 கோடி மதிப்பில் 40,000 டன் உயர்தர அரிசி அனுப்புவதற்கும் ரூ15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர் அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அங்கே பால்மாவு கிடைக்கவில்லை; குழந்தைகள் பரிதவிப்பதாக தமிழர்கள் துயர்படுகின்றனர். ரூ28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்துகளை அனுப்பவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஈழத் தமிழர் பிரச்சனை
இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ஒன்றிய அரசு அதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடாத வகையில் அனுப்பும் வகையில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். இந்த பொருட்கள் அங்கே சென்று சேர்ந்து அவர்கள் துன்பம் தணிவிக்கப்படும் போது அடுத்து படிப்படியாக ஈழத் தமிழரின் துயரத்தைப் போக்குவதற்கு, இத்தனை ஆண்டுகாலம் அவர்களை வாட்டி வதைத்த துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்; ஒன்றிய அரசிடம் அது குறித்து பேசுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் தெரிவித்தார்.

டெல்லிக்கு எம்.பிக்கள் குழு
இங்கே இருந்து அதிகாரிகளை அனுப்பி அங்கே பொருட்கள் விநியோகமாவதை கவனிக்கவும் தமிழருக்கு போய் சேருவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழக எம்.பி.க்கள் குழுவை பிரதமர் மோடியிடம் அழைத்துச் சென்று ஈழத் தமிழருக்கு உதவி செய்ய மத்திய அரசை வலியுறுத்தவும் ஏற்பாடு செய்வேன்; அதற்கு நாள் குறித்து தேதி கேட்டு எம்.பிக்களை அனுப்பி வைப்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் உபயோகமாகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. ஈழத் தமிழர் கண்ணீரை துடைப்பதற்கு ஸ்டாலின் ஆட்சி முன்வந்திருப்பதில் நாங்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். பெருமிதம் அடைகிறோம். எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.