தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு.. இன்றே நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,981 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் கேஸ்களின் எண்ணிக்கை 605 ஆக இருந்தது. அது போல் டிசம்பர் 28 -இல் 619 ஆகவும் டிச. 29 இல் 739 ஆகவும் டிசம்பர் 30-ஆம் தேதி 890 ஆகவும், 31 டிசம்பர் அன்று 1,155 ஆகவும், ஜனவரி 1-இல் 1,489 ஆகவும் ஜனவரி 2-இல் 1,594 ஆகவும் ஜனவரி 3-இல் 1,728 ஜனவரி 4இல் 2,731 ஜனவரி 5 இல் 4,862 ஆகவும், ஜனவரி 6 இல் 6,983 ஆகவும், ஜனவரி 7இல் 8,981 ஆகவும் இருந்துள்ளது. கடந்த மே 21 ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு 36,184 ஆக உயர்ந்திருந்தது.
தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் தினசரி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாமும் நடைபெறுகிறது. இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் பண்டிகை வந்தால் சனிக்கிழமைக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலாகியுள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications