கஜானாவை நிரப்பிய டாஸ்மாக் டூ கிளப் வருவாய்.. 4 மாதத்தில் ரூ.2,500 கோடி.. தமிழக அரசின் பிளான் என்ன
சென்னை: தமிழக அரசின் கஜானாவுக்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.2500 கோடி கூடுதல் வருவாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. மது விற்பனை முதல் கனிமங்கள் வரை சில முக்கிய துறைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால், இந்த வருவாய் எளிதில் கிடைத்து விடவில்லை. இதற்கு பின்னால், பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. அதை பற்றி இங்கே பார்ப்போம்..!!
தமிழக அரசின் கஜானாவுக்கு கடந்த நான்கு மாதங்களில் ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய் வந்திருக்கிறது. இதில் மதுபானங்கள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை எப்படி கூடுதலாக வந்தது என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழக அரசின் வருவாய்
கடந்த சில மாதங்களாக, அரசுக்கு வர வேண்டிய பணம் இடையில் எங்கும் சிக்காமல் நேரடியாக அரசு கஜானாவுக்கு வந்து சேருகிறதா என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக டாஸ்மாக் கொள்முதல் மற்றும் மதுபான விற்பனை தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் மதுபானங்கள், பீர், ஒயின் பெட்டிகளுக்கு மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் ஸ்பெஷல் கட்டணம் வசூலிக்க ஜூன் மாதம் உத்தரவிடப்பட்டது. அதன்படி மது வகைகளுக்கு பெட்டி ஒன்றுக்கு ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40, ஒயின் பெட்டிக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், தனியார் கிளப்களில் இயங்கும் பார்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டது.
கஜானாவை நிரப்பிய டாஸ்மாக் டூ கிளப் வருவாய்
இதனிடையே, காலி மதுபாட்டில்கள் தொடர்பான ரூ.10 விவகாரமும் கவனம் பெற்றுள்ளது. பாட்டில் வாங்கும்போது வசூலிக்கப்படும் ரூ.10 வைப்புத் தொகையை, காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் மறுபடியும் பெறும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.
இதை இன்னும் முறையாக செயல்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் Reverse Vending Machines அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலி பாட்டிலை மிஷினில் செலுத்தியவுடன் ரூ.10 வைப்புத் தொகையை டிஜிட்டல் முறையில் திரும்பப் பெறும் வசதி ஏற்படும்.
5 மாதங்களில் மட்டும் ரூ.2,500 கோடி
இப்படி மது விற்பனையில் வருவாயை முறைப்படுத்துவதுடன், கனிமங்கள் விற்பனையிலும் முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... இதன் விளைவாக கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் மது வகைகள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாம்.. ஒவ்வொரு துறையிலும் அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக கஜானாவுக்கு வந்து சேருவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பலே பிளான்
அதனால் இந்த நிதியாண்டில் அரசு கூடுதல் வருவாயை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்த ஆண்டு ரூ.20,000 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம், அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக வந்து சேர்ந்தால், அதன் தாக்கம் அரசின் பட்ஜெட்டிலும் நிச்சயம் தெரியும்... இனி எந்தெந்த துறைகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரப் போகின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய ஹைலைட்...!!


Click it and Unblock the Notifications
