அப்பார்ட்மென்ட்டில் உருவான கிளஸ்டர்.. சென்னையில் மீண்டும்.. தீயாக வேகமெடுத்த கொரோனா பரவல்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாகியுள்ளது. இரண்டு இடங்களில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு புது கிளஸ்டர் உருவாகியுள்ளது.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப்பட்டறையில் பணியாற்றும் மேற்கு வங்க தொழிலாளர்கள் 54 பேரில், 22 பேருக்கு, மாநகராட்சி சுகாதாரத்துறை நடத்திய பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 22 பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு கிளஸ்டர்கள்
இது ஒரு கிளஸ்டராக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரிலும் அபார்ட்மென்ட்களில்தான் கொரோனா வேகமாக பரவியது. எனவே, குடியிருப்புகளில் பார்ட்டிகள் நடத்த அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவகை பரவல்
சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்பு போல இல்லாமல் இப்போது ஒருவருக்கு கொரோனா பாதித்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். எனவேதான் 2வது அலையின்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் எளிதாக கொரோனா பரவுகிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

அதிக பாதிப்பு
தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக புதிதாக 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கிளஸ்டர்
சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கிளஸ்டர்கள் உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.