‘யார் வருவா? யார் இருப்பா?’ கதைய பாருங்க.. எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய ஓபிஎஸ்!
சென்னை : இப்படி ஒரு விதிமுறையை வகுத்தால் யார் வருவார்கள்? எம்ஜிஆர் வகுத்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி என பொது மேடையில் விமர்சித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில், மாற்றுக்கட்சியினர் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்வும், ஓபிஎஸ் அணி நிர்வாகி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடந்து கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

முதல் முறையாக
அதிமுகவில் நிலவி வரும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மாறி மாறி எதிர் தரப்பை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக அரசையும், ஓபிஎஸ்ஸையும் காட்டமாக விமர்சித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் சைலண்டாக தனது ஆதரவாளர்களுடன ஆலோசனை, டெல்லியில் மூவ், நிர்வாகிகள் நியமனம் என காய்நகர்த்தி வந்த நிலையில் நேற்று இரவு பொது நிகழ்வு மேடை ஒன்றில் பேசினார்.

சென்னையில் நிகழ்ச்சி
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சிறுபான்மையினர் அணியின் இணை செயலாளர் ஜின்னா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாற்றுக் கட்சியிலிருந்து சுமார் 1000 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

2 கையெழுத்து
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், "தலைவர் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவர் வகுத்த சட்ட விதிகளைப் போல் மற்ற கட்சிகளின் சட்ட விதிகள் இல்லை. தலைமைப் பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் இதே சட்ட விதிகளைத்தான் நாமும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். பொதுச் செயலாளர் பதவி போல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி இருவரும் கையெழுத்திடும் பொது அஜெண்டாவை உருவாக்கினோம்.

அன்புச் சகோதரர்
முறைப்படி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி. நான் ஒருங்கிணைப்பாளராகவும் 'அன்புச் சகோதரர்' எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். அதற்கு ஆதாரமாக 2026 ஆண்டு வரை வெற்றி படிவம் வழங்கினார்கள். அதற்குப் பின்னால் என்ன நடந்தது? ஏன் இந்த சூழ்நிலை உருவானது?

ஒரே வரியில்
ஜூன் 23 ஆம் தேதி, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டங்களில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே> ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என்ற வரலாற்றை அவர்கள் நடத்திக் காட்டினார்கள். பொதுச் செயலாளர் பொறுப்பில் ஜெயலலிதாவே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை ஒரே வரியில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கிறார்கள்.

யார் வருவா?
புதிதாக பொதுச் செயலாளர் பதவிக்கு குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டுமாம். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டுமாம். போட்டியிடுபவர்கள் 5 வருடங்கள் தலைமைக் கழகத்தின் நிர்வாகியாக இருக்க வேண்டுமாம். யார் வருவார்கள்? யார் இருப்பார்கள்? சர்வாதிகாரத்தின் மொத்த வடிவமாக இந்த பதவியை உருவாக்கியிருக்கிறார்கள்.

தர்ம யுத்தம்
எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் அடிப்படை உறுப்பினர்களுக்கு உரிமை அளிக்கும் சட்ட விதிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். அதை மீறி அவர்கள் செயல்பட்டதால் அதனை எதிர்த்தோம். அதுதான் தற்போது நடைபெறக்கூடிய தர்மயுத்தம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும்" எனப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications